திமுகவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா?- ட்விட்டரில் கனிமொழிக்கு தமிழிசை பதிலடி


செலவுக்குக் கட்சி... பதவிக்குச் சொந்தம்!

கூட்டணி வலுவாக அமையாவிட்டால் கட்சிக்காரர்களைக் களத்தில் இறக்கி செலவழிக்க வைப்பதும், வலுவான கூட்டணி அமைந்துவிட்டால் சொந்தபந்தங்களை வேட்பாளர்களாக நிறுத்தி டெல்லிக்கு அனுப்புவதும் பாமக தலைமை எழுதி வைத்திருக்கும் கடந்த கால வரலாறு. அந்த வகையில் இந்த முறை, தனது சொந்தபந்தங்களான முன்னாள் எம்பி தன்ராஜ், முன்னாள் அமைச்சர்கள் வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கு ராமதாஸ் வாய்ப்பளிக்கக்கூடும் என்கிறார்கள்.

கார்த்திக்காக களத்துக்கு வந்த ஸ்ரீநிதி!

ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி, சென்னை அப்போலோவில் மருத்துவராக பணிபுரிந்தபோது அப்போலோவின் சமூக வலைதளத்தைக் கையாளும் பொறுப்பையும் கவனித்தாராம். அந்த அனுபவத்தை வைத்து தற்போது சிவகங்கை தொகுதியில் கணவர் கார்த்திக்காக காங்கிரஸின் சமூக வலைதள பிரச்சாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். ஸ்ரீநிதியின் யோசனைப்படி, தொகுதியில் 5 பூத்களுக்கு ஒரு வாட்ஸ் - அப் அட்மினை நியமித்திருக்கிறார்கள். இந்த அட்மின்கள் தங்களது எல்லைக்குள் எத்தனை வாட்ஸ் - அப் குரூப்களை வேண்டுமானாலும் அமைக்கலாம். இந்த அட்மின்களுக்குச் சென்னையிலிருக்கும் கார்த்தியின் அலுவலகத்திலிருந்து அவ்வப்போது செய்திகள் பகிரப்படும். அந்தச் செய்திகளை உடனுக்குடன் மற்ற குழுக்களுக்குப் பரப்புவதுதான் அட்மின்களின் வேலை. இப்படியொரு யோசனையை ஸ்ரீநிதி அமல்படுத்த, “சமூக வலைதளத்தில் யார் அதிகப்படியான குழுக்களை ஆரம்பித்து  திறமையாகப் பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குத் தேர்தல் முடிந்ததும் ஜாக்பாட் காத்திருக்கிறது” என்ற உற்சாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

மயிலாடுதுறைக்குப் போராடும் மணிசங்கர்

இந்த முறை மயிலாடுதுறையில் போட்டியிடுவதற்காக ஏகப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார் மணிசங்கர் அய்யர். ஆனால், காங்கிரஸ் கொடுத்த விருப்பப்பட்டியலில் இந்தத் தொகுதி இல்லையாம். இதையடுத்து டெல்லிக்குப் பறந்த அய்யர், ஸீட்டுக்காக சோனியா குடும்பத்தினரை நெருக்கி வருகிறார். “கடந்த முறையும் இப்படி போராடித்தான் இவர் ஸீட்வாங்கினார். அதுபோல இந்த முறையும் ஐயா எப்படியும் ஸீட்டை வாங்கிட்டு வந்துருவாரு” என்று அடித்துச் சொல்கிறது அய்யர் தரப்பு. இதனிடையே, மயிலாடுதுறையின் முன்னாள் எம்எல்ஏ-வும் அய்யரின் விசுவாசியுமான ராஜ்குமார் “அய்யருக்கு இல்லைன்னா எனக்கு குடுங்க” என்று சென்னையில் அழகிரியை வட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாராம்.

தமாகாவைக் கூண்டோடு கலைத்துவிட்டோம்!

பாஜக கூட்டணியில் தமாகாவும் இணையலாம் என்று பேசப்படும் நிலையில், பாஜக அணியில் தமாகா இணைவதை எதிர்த்து திருப்பூரில் தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் வே.முத்துராமலிங்கம் தலைமையில் சுமார் 1000 பேர் தமாகாவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள். “எந்த நிலையிலும் தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை மூப்பனார் எடுத்ததில்லை. அப்படியிருக்கையில், அவரால் உருவாக்கப்பட்ட தமாகா, சந்தர்ப்பவாதத்தால் பாஜக கூட்டணியில் இணைய முடிவெடுத்தது விதை நெல்லையே விற்பதற்குச் சமம். காமராஜரின் உண்மைத் தொண்டர்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதால் நாங்கள் எங்கள் பகுதியில் தமாகாவைக் கூண்டோடு கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்துவிட்டோம்” என்று அறிவித்திருக்கிறார் முத்துராமலிங்கம்

அழகிரி ஸ்டைலில் அனிதா

தூத்துக்குடியில்  களமிறங்கவிருக்கும் கனிமொழிக்கு  யார் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பது என்பதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவனுக்கும்  இடையில் கடும் போட்டியே நடக்கிறது. தனது மாவட்டத்துக்குள் வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் எந்த பூத் கமிட்டி (20 நபர்கள் கொண்டது) திமுகவுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தருகிறதோ அவர்களுக்கு 100 பவுன் பரிசு என அறிவித்திருக்கிறார் அனிதா. தன்னை மேடையில் வைத்துக்கொண்டு அனிதா,  அழகிரி ஸ்டைலில் இப்படி அறிவித்ததால் தன் பங்காக கூடுதலாக 25 பவுன் தருவதாக அறிவித்திருக்கிறார் கனிமொழி. இதைப் பார்த்துவிட்டு கீதா ஜீவன் என்ன ஆஃபர் அறிவிக்கப் போகிறாரே என அவரது  மாவட்டத்து உடன்பிறப்புகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

எம்.ஆர்.கே-யை நெருக்கும் சம்பந்தி!

கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவனை நிறுத்த  சிலர்  கொம்பு  சீவுகிறார்கள். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அதில் இஷ்டமில்லையாம். மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமியிடம் உதவியாளராக இருந்த எஸ்.ராஜேந்திரனின் மகளைத்தான் கதிரவனுக்குத் திருமணம் முடித்திருக்கிறார்கள். பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் காட்டுமன்னார்குடி. சென்னையில் வசித்த ராஜேந்திரனின் மகளுக்குக் காட்டுமன்னார்குடியில் போய் முடங்கியது சரிப்பட்டு வரவில்லையாம். இதனால், மாப்பிள்ளை எம்பி-யாகிவிட்டாலாவது  குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்து விடுவார் எனக் கணக்குப்போடும்  ராஜேந்திரன், “மாப்பிள்ளைக்காக  கட்சித்தலைமையிடம்  நீங்கள் பேசுகிறீர்களா... இல்லை, நானே பேசட்டுமா” என்று சம்பந்தியை நெருக்குவதாகத் தகவல்.

அதுதானா அந்த ரகசியம்!

என்னதான் ஆட்சியை ஆபத்தில்லாமல் கொண்டு செலுத்தினாலும் தினகரன் அடிக்கடி சொல்லும் ‘ஸ்லீப்பர்செல்’ பார்ட்டிகள் இன்னமும் கட்சிக்குள் இருப்பதாகச் சந்தேகிக்கிறாராம் எடப்பாடியார். அப்படி சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை சின்னம்மாவுக்கு எதிராக அறிக்கைகள் விடும்படி அடிக்கடி பிரஷர் போகிறதாம். இதற்கு ஒத்துவராத அமைச்சர்களைக் கச்சிதமாய் கட்டம்கட்டி விடுகிறார்களாம்.  சின்னம்மாவின் விசுவாசி என்று சொல்லப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியும், அண்மையில் கொங்குமண்டலத்தில் மா.செ. பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரும் அப்படித்தான் ஓரங்கட்டப்பட்டார்களாம். தங்களுக்கும் அந்த கதி வந்துவிடக்கூடாது என்று பயந்துதான் தென்மாவட்ட அமைச்சர்கள் சிலர் அவ்வப்போது சசிகலா- தினகரனுக்கு எதிராக கனல் வார்த்தைகளைக் கக்குகிறார்களாம்!

அணி திரட்டும் அன்பில் பேரன்!

திருச்சி  திமுகவின்  முக்கிய  அடையாளமாக விளங்கிய அன்பில் தர்மலிங்கம், 22 ஆண்டுகள் ஒருங்கிணைந்த  திருச்சி மாவட்ட திமுக  செயலாளராக  இருந்தவர். இவருக்குப்பிறகு இவரது மகன்களான  அன்பில் பொய்யாமொழி, அன்பில் பெரியசாமி ஆகியோர் எம்எல்ஏ-க்களாக இருந்தனர். தற்போது அன்பிலின் பேரன் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவர் திமுக தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தாலும் திருச்சியில் நேருவின் செல்வாக்கை மீறி எதையும் செய்ய

முடியவில்லை. இந்த நிலையில், மே மாதம் அன்பில் தர்மலிங்கத்தின் 100-வது பிறந்தநாள் வருகிறது. அதைச் சாக்காக வைத்து, தாத்தாவின் விசுவாசிகளை ஒன்று திரட்டி அன்பில்  கிராமத்தில் தர்மலிங்கத்துக்கு சிலை திறக்கத் தயாராகி வருகிறார் மகேஷ். இந்த விழாவுக்கு ஸ்டாலினையும் அழைத்துவந்து திருச்சியில் நேருவுக்குச் சமமாக தங்கள் குடும்பத்துக்கும் செல்வாக்கிருக்கிறது என்பதை நிரூபிக்க நினைக்கிறாராம் மகேஷ்.