பங்குனியில் வீடு மாறலாமா?


ந.வினோத் குமார்

1982-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஒரு காலைப் பொழுது. இளவெயில் படர்ந்திருந்தது. நெஞ்சை நிமிர்த்தி, ஒவ்வொரு அடியாக அந்தக் கட்டிடத்தை நோக்கி எட்டு வைத்தான் பாப்லோ. அவனது முகத்தில் பெருமிதம் பொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை சர்ட். பழுப்பு நிற பேன்ட். கால்களில் கறுப்பு ஷூ. சட்டைக்கு மேலே சாம்பல் நிற கோட். அந்த நடை, உடை, பாவனையில் அவனைப் பார்க்கும் யாரும், அவன் ஒரு கடத்தல்காரன் என்று நினைத்துவிட முடியாது.

மெல்ல மெல்ல படிகள் ஏறி அந்தக் கட்டிடத்தின் வாயிலுக்கு வந்தான் பாப்லோ. கொலம்பிய நாடாளுமன்றக் கட்டிடம் அது. நான்கைந்து  பேர் வட்டமாக நின்று, இரண்டு கைகளையும் விரித்து, ஒருவருடன் ஒருவர் கோத்துக்கொண்டால் மட்டுமே கட்டி அணைக்க முடியும் எனும் அளவுக்கு மிகப்பெரிய தூண்கள், அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றும் அளவுக்கு உயரமான கூரைகள், ‘ஆஹா…’ என்று சொன்னால், ‘ஆஆஆ…. ஹ்ஹ்…ஹாஹா…’ என்று எதிரொலித்து அடங்கும் அளவுக்கான விஸ்தாரமான அரங்குகள் என அந்தக் கட்டிடம் பிரம்மாண்டமாக இருந்தது. அந்த இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால், ‘ச்சே… நாம எவ்வளவு சின்ன மனுஷங்க!’ என்ற எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால், பாப்லோவுக்கு அது மிகவும் சின்ன இடமாக இருந்தது.

அதனாலோ என்னவோ, அவன் அந்த இடத்தின் மாண்புகளை அறிந்திருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அறைக்குள் அவன் நுழைய முயன்றபோது, வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டான். அந்தக் கட்டிடமே ஒரு நிமிடம் சப்தம் அடங்கிப் போயிருந்தது. ‘நாடாளுமன்ற உறுப்பினரை வாயிற் காப்பாளர்கள் தடுப்பதா..?’

அவன் தடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் ‘டை’ கட்டியிருக்கவில்லை. ‘என்னது… டை கட்டாததற்காகத் தடுத்து நிறுத்துவதா?’ ஆம்… கொலம்பிய நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான விதிகளில் ஒன்று, அவைக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் ‘டை’ அணிந்திருக்க வேண்டும். தான் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணம் பாப்லோவிடம் விளக்கப்பட்டது.

“ஆமா… நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இப்படித்தான் விலை உயர்ந்த கோட் சூட் மாட்டிக்கிட்டு, விதவிதமான டிசைன்ல டை கட்டிக்கிட்டு வந்து கொள்ளை அடிப்பாங்கன்றது கொலம்பியர்கள் எல்லோருக்கும் தெரியுமே! நாம செய்யிற வேலைக்கும், நம்மோட தோற்றத்துக்கும் என்ன சம்பந்தம்..?” – பாப்லோ தன் கோபத்தை அடக்கிக்கொண்டு கொஞ்சம் நக்கலான தொனியில் கேட்டான்.

நாடாளுமன்றத்தில் பாப்லோ தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பானது. வானொலி, தொலைக்காட்சி என எங்கும் அதுதான் ‘பிரேக்கிங் நியூஸ்’. அவனே எதிர்பார்க்காமல், அவன் மீது முதல் நாளிலேயே ஒரு கவனம் குவிந்தது.

 ‘அடடா… இப்போ என்ன செய்வது?’ என்று பாப்லோ யோசிக்கத் தொடங்கிய வேளையில், அவன் முன் பல கைகள் தோன்றின. ‘டை’களுடன்..! அந்த இன்ப அதிர்ச்சியில் புன்னகைத்தவாறே ஒருவரிடமிருந்து ‘டை’ வாங்கிக் கட்டிக் கொண்டு அவைக்குச் சென்றான் பாப்லோ. ஆனால், அவைக்கு உள்ளே சென்று அமர்ந்தவுடனே ‘டை’யைக் கழட்டிவிட்டான்.

“அடிப்படையில இந்த டை எல்லாம் எதுக்குங்க? நான் இதுவரைக்கும் டை கட்டியதும் இல்லை. இனிமே கட்டப் போறதும் இல்லை. நாம செய்ய வேண்டிய வேலைக்கும், நாம கட்டுற இந்த டைக்கும் சம்பந்தமே இல்லை..!” என்று இதர உறுப்பினர்களிடம் தன் எண்ணத்தைச் சொன்னான். இதுதான் நாடாளுமன்றத்தில் அன்று அவனது அறிமுகமாக இருந்தது..!

***

நாட்கள் உருண்டன. இப்போது பாப்லோவுக்கு நாடாளுமன்றம்தான் ‘மெயின் பிசினஸ்..!’ நாடாளுமன்ற உறுப்பினராகத் தன் ஆரம்ப நாட்களில் நாட்டின் இதர பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அலுவல் நிமித்தமாகப் போய் வர வேண்டியிருந்தது. பெரும்பாலான அந்தப் பயணங்களைத் தன் ‘சைடு பிசினஸுக்கான’ டூராகவும் மாற்றிக்கொண்டான் பாப்லோ.

அப்படித்தான் ஒரு முறை அவன் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு சில அரசியல்வாதிகளைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டான். அதன் பயனாக, ஐரோப்பாவில் அவன் தன் கடத்தல் வியாபாரத்தைக் கிளை பரப்புவதற்கான வாய்ப்புத் திறந்தது. சிலர் அவன் மூலமாக கடத்தல் உலகத்துடனான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். பிறகு, ஐரோப்பாவின் சில நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டான். அப்போது அங்கு ‘மொனாக்கோ’ எனும் சிறிய நகரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த நகரத்தின் அழகிலும் சுதந்திரத்திலும் மயங்கிய பாப்லோ, பிற்பாடு மெதஜின் நகரத்தில் தான் கட்டிய வீடொன்றுக்கு ‘மொனாக்கோ’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

நாடு நாடாகப் பயணித்தாலும் விளையாட்டு அரங்கங்கள் திறப்பது, ஏழைகளுக்கு உதவுவது என்று தன்னை மக்களுடன் ஒருவனாகவே நிலைநிறுத்திக் கொண்டான் பாப்லோ.  ‘இவனுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது’ என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகப்பட்டாலும், அவன் எப்படிப் பணம் சம்பாதிக்கிறான் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. அவன் தங்களிடமிருந்து சென்றவன். செல்வந்தர்களுக்குச் சமமாக வளர்ந்தவன். ஆனாலும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதை அவன் மறக்கவில்லை. மக்களையும் அவன் கைவிடவில்லை. இதனால், அவனை மக்கள் விரும்பினார்கள். இல்லை… வழிபட்டார்கள்..!

‘இதோ வந்துவிட்டான் ஒரு பரோபகாரி. ஏழைகளுக்காகவே பிறந்தவன். அவனைப் பார்த்தால் பலருக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு அச்சமும் தோன்றுகிறது. பாராட்டவும் தூற்றவும் செய்கிறார்கள். ஆனால், யாரும் பாப்லோ எஸ்கோபார் என்ற பெயருக்கு மரியாதை செய்யாமல் இருந்ததில்லை. பாப்லோ, நம் காலத்தின் ராபின் ஹூட்’ என்று பத்திரிகைகள் அவனைப் புகழ்ந்து எழுதின. அவனது கடத்தல் தொழிலைப் பற்றி அறிந்திருந்தாலும் ஊடகங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

எல்லாம் அவன் விரும்பியது போலவே நடந்து கொண்டிருந்தன. இனி யாராலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கனவு கண்டு கொண்டிருந்தான் பாப்லோ. அவனது அரசியல் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தார் செனட்டர் லாரா..!

அழிக்கப்பட்ட மொனாக்கோ..!

வெள்ளை நிறத்தில், ஆறு மாடிகளைக் கொண்ட கட்டிடம் மொனாக்கோ. இந்த வீட்டில் பெரும்பாலும் பாப்லோவின் குடும்பத்தினர்தான் வசித்து வந்தனர். அவர்கள் இருந்த ஒரு தளம் தவிர, இதர தளங்களில் பாப்லோவின் மனைவி ‘டாடா’ ஆர்வமாகச் சேகரித்த ஓவியங்களும், கைவினைப் பொருட்களும், பாப்லோவின் மகன் யுவானின் விளையாட்டுப் பொருட்களும் நிறைந்திருந்தன. பாப்லோ வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே இங்கே வாழ்ந்தான். 1988-ம் ஆண்டில் பாப்லோவின் போட்டியாளர்களும் எதிரிகளுமான ‘கலி கார்ட்டெல்’, இந்த வீட்டின் மீது வெடிகுண்டு வீசினார்கள். அந்தக் குண்டுவீச்சில்தான் பாப்லோவின் மகள் மேனுவலாவுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு பல காலம் பாப்லோ என்ற மனிதனின் வரலாற்றைச் சொல்லும் விதமாக வீற்றிருந்தது இந்தக் கட்டிடம். கொலம்பியாவின் முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் இது இருந்தது. அந்தக் கட்டிடம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி குண்டு வைத்து இடிக்கப்பட்டது. அதை உலகின் மிக முக்கியமான தொலைக்காட்சி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின.

இந்தக் கட்டிடம் இருந்த இடத்தில் 80 மற்றும் 90-களில் பாப்லோ போன்ற போதைப் பொருள் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக, 5 ஆயிரம் சதுர அடியில் நினைவகம் ஒன்றை எழுப்ப மெதஜின் நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

(திகில் நீளும்...)