தமிழக மீனவர்கள் 11 பேர் கைது; இலங்கை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்


11

நான்கு கால் நாகரிகம்

செல்லக் கோபத்தில்

'இதுதான் நீயாம்' என

பாப்பா வரையும்

என்னையொத்த நாய்க்குட்டி

அவளுக்கு மட்டுமே

விசுவாசமாய் வாலாட்டுகிறது.

- தி.சிவசங்கரி

அசல் உரிமம்

தந்தையோடு இரு சக்கர வாகனத்தில்

பயணிக்கும் குழந்தை

இடமிருந்தும் பின்னிருக்கையில் அமராது

வலிய முன்னிருக்கை

எரிபொருள் டேங்க் நுனி மீதமர்ந்து

கடக்கும் வாகனத்தையும்

கடந்த வாகனத்தையும்

பார்வையால் அளந்தபடி பயணிக்கிறான்

அவ்வப்போது வேகத்தின் முள்ளை நோட்டமிட்டபடி.

இடது வலது திரும்பும்போதெல்லாம்

இண்டிகேட்டரை இயக்கியும்

ஆங்காங்கே வேகத்தடைக்கும்

பள்ளி மருத்துவமனை அங்காடியருகே

அதீத ஒலியெழுப்பாது

மிதவேகத்தில் செலுத்தும் அப்பாவை

குனியச்செய்து

அழுத்தமாய் முத்தமொன்றை பதித்து

நுழைகிறான் வீட்டுக்குள்

‘நைஸ் டிரைவிங்’ என்று!

- துரை.நந்தகுமார்

சொல்லுக்குள் வராத பெயர்

விழியுருட்டி கவிதை செய்கிறாய்

வானத்தின் அத்தனை அம்சங்களும்

பொருந்தியதைப் போலிருக்கிறது அது.

வெண்விழித் திரவம் வானமென்றும்

கருந்திராட்சை கருமை அமாவாசையென்றும்

பெயர் சூட்டுகிறாய்.

அத்தனையும் ஒன்றுசேர்த்து

பொருத்திப் பார்க்கிறேன்

உன் சாயலில் இருக்கிறது அது.

- பிறை நிலா

பங்கீடல்

இருந்த காசுக்கு

வாங்கிவந்த கமர்கட்டை

எவர் மனதும் காயப்படாமல்

வட்டமாக அமரவைத்து

சட்டை நுனியோரம் புதைத்து

காக்கா கடி கடித்து

ஆளாளுக்கு சமமாய் பிரித்து

பங்கிட்ட அண்ணன்

சிதறிய தேங்காயாய்

சிதறிப் போனான்

அப்பாவின் சொத்தை

பங்கிடும்போது!

- துரை.நந்தகுமார்

பனைபடுகடாம்!

நிலவு வானத்திலிருந்து விழாமலிருக்க

பனைமரம் ஓலையால்

ஏந்திப் பிடித்துக்கொண்டிருக்கிறதென்று

பாட்டி சொன்ன கதையையும்,

பனங்காய் சுட்டு, புளித்தண்ணி சேர்த்து,

எனக்கு உண்ணக்கொடுத்து

பதனீரும், விறகுமாய் வாழ்ந்த என் பாட்டி

இப்போது புகைப்படமாய் மரச்சட்டத்துக்குள்,

அதன் மங்கிப்போன வெளிச்சத்தில்

அசைந்துக்கொண்டிருந்தன

என் பனைமர நினைவுகள்.

- வத்சலா ரமேஷ்

கரைந்துகொண்டிருக்கும் வாழ்வு

கரிசல் காட்டின் இளஞ்சூடு

கடந்துபோன தென்றல் காற்று

பதியப்படாத இசைக்கருவி

பார்த்துப் பழகாத பரிசல்

இளவட்டக்கல்லில் ஒளிந்த புன்னகை

தண்ணீர்க்குடம் தாங்குபவள்

பள்ளியின் மேசைப் பெயர்கள்

பரிசு வாங்கிய தட்டுகள்

எழுத இயலாப் புனைப்பெயர்கள்

தாவணி கிறுக்கல்கள்

சைக்கிள் சக்கர அதிகாரங்கள்

யூனிஃபார்ம் டிரெஸ்ஸின் மூக்குத்திகள்

எலந்தப் பழ சுவையூறிய இதழ்கள்

ஜியாமென்ட்ரி பாக்ஸின் சேமிப்புகள்

காலத்தைச் சேமித்த தபால் டவுசர்கள்

நீருக்கடியில் உருளும் கூழாங்கல்லாய்

கரைந்துகொண்டிருக்கிறது வாழ்வு!

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல...

பெரியவர் சொல்லச் சொல்ல

கடிதம் எழுதினேன்

கசியும் பேனாவைத் துடைத்தபடி.

நன்றி சொல்லி வாங்கிப் போனார்

அஞ்சலில் போட.

விரலில் பிசுபிசுத்தன கடித வரிகள்!

- தட்சன்

கை வீசிச் செல்கிறது கடல்

அந்தியில் சிங்கமாகும் கடலின்

பிடறி முடியசையும் அலைகள்

தலையுயர்த்தி வான் வருடும்போது

மூக்கின் நுனி மினுமினுப்பு

பிறையாகி மேலெழுகிறது.

கரையோர தென்னங்கீற்றில்

சோம்பல் முறிக்கிறாள்

கம்பீரக் காற்றுப் பெண்.

நீரை உழுதபடி ஊடல்

நெட்டி உடைக்கின்றன

நகக்கண் வடிவப் படகுகள்.

யாருமற்ற தீவில் வெண்மணற் பரப்பில்

நீராமைகள் நகர்ந்த தடம்.

புரண்டு படுத்தவள் கணுக்காலில்

கொலுசழுந்திய

தடம் வெறிக்கிறான் சந்திரன்.

இப்போது சிங்கத்தின் பிடறி

வேகமாய் சிலும்புகிறது.

- நேசமித்ரன்