'சிஎஸ்கேயிடம் தோற்றதை மறக்க விரும்புகிறோம்': தோற்றாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசிய கோலி


கரு.முத்து

துறையூர் - திருச்சி பிரதான சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், தீயணை நிலையம், சுற்றுலா மாளிகை உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இருக்கின்றன. இந்த ஏரியாவைச் சுற்றிச் சுற்றி உருள்கிறது அந்த தள்ளுவண்டி. செவ்வாழை, கற்பூரவள்ளி, பச்சைநாடா, ரஸ்தாளி என வாழைப்பழங்களால் நிரம்பிய அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு வருகிறார் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட முருகேசன்.

வாடிக்கையாகப் பழம் வாங்குபவர்கள், விலையைக்கூட கேட்காமல் பழத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு பணத்தை முருகேசன் கையில் திணித்துவிட்டுப் போகிறார்கள். புதிதாய் வருகிறவர்களுக்கு விலை சொல்லிக் கொண்டிருக்கும்போதே முருகேசனுக்கு மனதுக்குள் ஏதோ உதிக்கிறது. பக்கத்தில் நிற்கும் மனைவியிடம், “கலா வண்டிய கொஞ்சம் பாத்துக்க...” என்று சொல்லிவிட்டு அருகில் கிடக்கும் இரும்பு நாற்காலியில் அமர்கிறார்.

ஒரு பழைய பாலித்தீன் பையிலிருந்து பரீட்சை அட்டையையும் ஒரு ரூபாய் பேனாவையும் எடுக்கும் அவர், வெள்ளைத் தாள்களை எடுத்து க்ளிப்பில் செருகிக்கொண்டு சரசரவென எண்ண ஓட்டத்தை எழுத ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள்... அவரது ஏட்டில் அழகாய் ஒரு சிறுகதை பிரசவித்து பெயர்வைக்கச் சொல்கிறது!

பழ வியாபாரி மட்டுமல்ல... திருச்சி மாவட்டத்தில் ஆகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்பட்டிருப்பவர் இந்த க.முருகேசன். அண்மையில் இவர் எழுதிய ‘மாண்புறு மனிதர்கள்’ எனும் நாவல் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தால் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி, அந்தக் கதையை அச்சிட்டு வெளியிட உதவியிருக்கிறார்கள்.

முருகேசன் ஒரு எழுத்தாளர் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கோ அக்கம் பக்கத்தினருக்கோ கூடத் தெரியாது. படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். என்றாலும் இதுவரை எழுத்துலகம் தன்னைப் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்ற ஆதங்கம் இவருக்குள் தேம்புகிறது.

2010-ல், இவரது செங்குருதி நாவல் முதன் முதலில் அச்சுக்குப் போனது. தி.க.பொதுச்செயலாளர் வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோரால் வெளியிடப்பட்ட இந்த நாவல் திருச்சி மாவட்ட முத்தமிழ் கலை பண்பாட்டு மையத்தால் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5000 ரூபாய் பரிசும் பெற்றது. இதனால் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற முருகேசன், ‘பச்சைமலைக்குயில்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

மானுடம் மாத இதழில் ‘உறவு’, ‘பார்வை’ உள்ளிட்ட ஆறு கதைகளை எழுதியிருக்கும் முருகேசன், லட்சியம் வெல்லும் பத்திரிகையில் ஒரு வருடமாக  ‘மாயை - ஆட்சிகளும் முயற்சிகளும்’ என்ற வரலாற்றுத் தொடரையும் எழுதி வருகிறார். எழுத்துத் தளத்தில் இப்படி இடையறாது இயங்கும் முருகேசன், தற்போது ‘ஊழ்வினை உறுத்தும்’ என்ற சமூக அவலங்களைப் பேசும் நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார்.

தள்ளுவண்டியில் பழம் விற்று தனது மகன்கள் இருவரையும் படிக்கவைத்திருக்கிறார். மூத்த மகன் குகனை ஒரு வேலையிலும் அமர்த்திவிட்டார். துறையூரில் ஜமீன்தார் பள்ளி அருகே இருக்கிறது முருகேசனின் வீடு. அந்தச் சிறிய கூரை வீடு முழுவதும் வாழைப்பழங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழ வாசனையோடு சேர்ந்து பழைய புத்தகங்களின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது. ஒரு சிறுகதையைப் பற்றிக் கேட்டால், அந்தச் சிறுகதை வெளியான புத்தகத்தைத் தேடி துலாவுகிறார்கள். கலா பீரோவுக்குள் தேடுகிறார், முருகேசன் வாழைப்பழங்களுக்கு இடையில் அடுக்கி இருக்கும் புத்தக அடுக்குகளில் தேடுகிறார்.

“திருச்சிக்குப் போனா 500 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவேன். எழுதுற பேப்பருக்கே வாரத்துக்கு 200 ரூபாய் வரைக்கும் செலவாகுது” என்று சொல்லும் முருகேசன், தான் படித்த புத்தகங்களை சிறுசிறு பைகளுக்குள் வைத்து மூலையில் போட்டு வைத்திருக்கிறார். ஒரு மழை பெய்தாலும் அவை வீணாகிவிடும் வாய்ப்பு கண்முன்னே தெரிகிறது.

பழக்கடையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டால் இவருக்கு நேரம் போவதே தெரியாது. தொடர்ச்சியாக நான்கு மணி நேரம்கூட இடைவிடாமல் எழுதிக்கொண்டே இருப்பாராம். “அந்த நேரம் வெளியுலகத்துல என்ன நடந்தாலும் இவருக்குத் தெரியாது”என்கிறார் மனைவி கலா.

“சின்ன வயசுல எங்க ஊர்ல திருவள்ளுவர் நாடக மன்றம் இருந்துச்சு. அதுல நெறைய நாடகம் போடுவாங்க. எங்க அப்பா ஜமீன்தார் வேஷம் போட்டு நடிப்பாரு. அந்த வசனங்களை ஒரு பேப்பர்ல எழுதி வெச்சிக்கிட்டு வீட்ல படிச்சிட்டே இருப்பார். அந்த வசனங்களைப் பாத்துத்தான், நாமும் இப்படி எழுதணும்கிற எண்ணமே எனக்குள்ள வந்துச்சு. அப்ப, பதினோறாப்பு பாடப்புத்தகத்துல, அறிஞர் அண்ணா எழுதின ‘செவ்வாழை’ன்ற சிறுகதை பாடமா இருந்துச்சு. யதார்த்தமா ஒரு நாளு அந்தக் கதையைப் படிச்சுட்டு, இந்த மாதிரி நடையில நம்மளும் எழுதணும்னு நெனச்சேன். அதுமாதிரி எழுதி எழுதிப் பார்ப்பேன். சரியா வராது. பேப்பர கசக்கிப் போட்டுட்டு பொழப்பப் பார்க்க ஓடிருவேன்.

பெருசா காசு பணம் சம்பாதிக்காட்டியும் அன்னன்னைக்கி பொழப்பு நிம்மதியா ஓடுறதால இப்ப கொஞ்சம் நிதானிச்சு எழுத முடியுது. அப்பெல்லாம், எழுதுறத பாதுகாத்து வெச்சு புத்தகம் போடுற அளவுக்கு வசதி இருக்காது. இப்ப ஏதோ நண்பர்கள் தரும் ஊக்கத்துல புத்தகம் போடுற அளவுக்கு வந்தாச்சு. வாழப்பழ வியாபாரி முருகேசன் படைப்பாளி முருகேசனா முழுசா அங்கீகரிக்கப்படணும். அதுவரைக்கும் இந்தப் பேனாவ கீழ வைக்க மாட்டேன்; எழுதிக்கிட்டே இருப்பேன்” என்கிறார் எழுத்தாளர் முருகேசன்.