ராதாரவியின் பேச்சால் சர்ச்சை: நடிகர்கள் மீது சின்மயி காட்டம்


ஆர்.ஷபிமுன்னா

பாகிஸ்தானிடம் சமீபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் அடுத்த 60 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், 1971-ல் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் அவர்களிடம் சிக்கிய நமது 54 போர்வீரர்களின் நிலை என்னவாயிற்று என்பதுதான் இன்னும் தெரியவில்லை. இவர்களை மீட்பதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளின் அரசுகளும் அக்கறை காட்டவில்லை என்பதுதான் உண்மை.

வங்கதேசம் தனிநாடாக உருவானதன் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே மூண்ட போர் உள்ளது. இந்தப் போரில் இந்தியாவின் 54 போர்க்கைதிகள் பாகிஸ்தானிடம் சிக்கினர். போர் முடிந்து 48 வருடங்கள் ஆயிற்று. அந்தப் போரில் இரு நாட்டுத் தரப்பிலும் உயிர் துறந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் இந்தியத் தரப்பில் 54 பேர் தம் வசம் போர்க்கைதிகளாக இருப்பதை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ளாமலே இருந்தது. இந்திய அரசும் தமது 54 வீரர்களை மறந்து போனது. இவர்களில் தற்போது உயிருடன் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதும் தெரியவில்லை. சிறைவாசத்தின்போது உயிரிழந்தவர்களுக்குப் பதில் அவர்களின் அஸ்திதான் பாகிஸ்தான் சிறைகளில் தற்போது குவளைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த 54 போர்க் கைதிகளும் இந்தியாவின் பஞ்சாப், ஹரியாணா, உபி, டெல்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை மீட்பதற்காக, ‘காணாமல் போன போர்க் கைதிகளின் குடும்பத்தினர் சங்கம்’ என்ற பெயரில் 1994-ல் ஒரு அமைப்பும் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கிய 54 குடும்பத்தினரும் தொடர்ந்து இரு நாட்டு அரசுகளிடமும் போராடி ஓய்ந்துவிட்டனர். இதன் உறுப்பினர்களால் அவ்வப்போது வெளியான சில உண்மைச் சம்பவங்கள்தான் நம் மனசாட்சியின் மீது சுத்தியல் அடியாக விழுகின்றன.

இந்திய விமானப் படையில் லெப்டினன்ட் அதிகாரியாக இருந்தவர் வி.வி.தாம்பே. இவரது போர் விமானம், பாகிஸ்தான் எல்லையில் விபத்துக்குள்ளாகி விழுந்தது. இதில் தாம்பே இறந்துவிட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்து அவர் சம்பந்தப்பட்ட கோப்புகளையும் மூடிவிட்டது. ஆனால், விபத்திலிருந்து உயிர் தப்பிய தாம்பே இன்றும் பாகிஸ்தான் சிறையில் வாடுவதற்கான ஆதாரத்தை அவரது மனைவி தமயந்தி தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தார்.

டிசம்பர் 5, 1971 தேதியிட்ட ‘தி சண்டே பாகிஸ்தான் அப்சர்வர்‘ எனும் இதழ் வெளியிட்ட செய்தியை தமயந்தி ஆதாரமாகக் காட்டினார். ‘இந்திய விமானப்படையின் ஐந்து பைலட்டுகள் உயிருடன் மீட்பு‘ என்ற அதில் தமயந்தியின் கணவர் தாம்பே பெயரும் இருந்தது. இந்த நிலையில், தனது கணவர் இறந்துவிட்டதாகத் தான் எப்படிக் கருத முடியும் என்று கேள்வி எழுப்பினார் தமயந்தி.

பீரங்கிப் படையில் இருந்து ஓய்வுபெற்ற பிரிகேடியர் வி.ஏ.எம்.உசைன் இது குறித்து காமதேனுவிடம் கூறுகையில், “செப்டம்பர் 1983-ல் ஒரு முறை தமயந்தி தாம்பே உட்பட ஆறு உறவினர்களுக்கு பாகிஸ்தானின் முல்தான் சிறைக்கு நேரில் சென்று சோதனை செய்ய ஜியா உல் ஹக் ஆட்சிக் காலத்தில் அனுமதி கிடைத்தது. ஆனால், அவர்கள் வருவதை எதிர்பார்த்து, இந்திய போர்க் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றிவிட்டதாக உறவினர்களிடம் அங்கிருந்த மற்ற கைதிகள் கூறியுள்ளனர். வேறு சிறைகளிலும் சோதனை செய்யக் கேட்கலாம் என்றால், அப்படி அங்கு 70  சிறைகள் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் சோதனையிடுவது சாத்தியமல்ல என்று சொல்லிவிட்டார்கள். பின்னாளில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் இந்தியாவில் ஒரு சந்திப்புக்காக வந்தபோது அவரிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அதையடுத்து, பாகிஸ்தான் சிறைகளில் சோதனையிட அவருடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முஷ்ரப் ‘அப்படி யாருமே இல்லை’ எனக் கை விரித்தார். அதனால், அந்த 54 போர்வீரர்கள் அரசுப் பதிவேடுகளில் ‘காணவில்லை’ எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

1971 போர் முடிந்த சில வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் நாட்டுச் சிறைகளில் வாடும் இந்திய போர்க்கைதிகள் பற்றிய ஒரு கட்டுரையைப் புகைப்படத்துடன் ‘டைம்ஸ்’ வெளியிட்டது. அதில் ஒருவர் 1971 போரில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்ட, பெங்களூரைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஏ.கே.கோஷ். இப்படி, காணாமல் போன 54 போர்க் கைதிகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் நெஞ்சைப் பிழியவைக்கும் ஒரு துயரக் கதை உண்டு.

பாதிக்கப்பட்ட 54 பேர் விடுதலைக்காக சம்பந்தப்பட்டவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, மத்திய அரசு பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் இந்திய போர்க்கைதிகள் 54 என நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டது. ஆனால், அவர்களை மீட்கும் முயற்சிகள் குறித்து எந்தத் தகவலையும் கூறவில்லை. இது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பிறகு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டதற்கு, அவையெல்லாம் ராணுவ ரகசியங்கள் என்று சொல்லி வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது. நீதிமன்றங்களும் வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டன.

இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தச் சங்கத்தினரிடம் பிரதமர் மன்மோகன், கண்டிப்பாக 54 பேரையும் விடுதலை செய்ய முயல்வதாகவும், இதற்காக பாகிஸ்தான் அதிபருடன் பேசுவதாகவும் உறுதி அளித்தார். எனினும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியிடமும் அந்தச் சங்கத்தினருக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. தீவிரவாதிகளிடம் சிக்கியவர்களை எளிதாக மீட்ட அரசுக்கு, எதிரி நாட்டின் சிறையில் வாடும் நம் போர்வீரர்களை மட்டும் ஏனோ காப்பாற்ற முடியவில்லை.

போரின்போது,  தம் 22 முதல் 35 வயதில் பாகிஸ்தானிடம் பிடிபட்டவர்களில் சிலருக்கு முக்கால்வாசி வாழ்க்கையும் சிலருக்கு முழு வாழ்க்கையும் சிறையில் கழிந்துவிட்டது. இதில், நிச்சயமாக இன்னும் பலர் உயிருடன் இருப்பார்கள் என அவர்கள் குடும்பத்தினர் நம்புகின்றனர். இதே நம்பிக்கை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தினரிடமும் உள்ளது. இது குறித்து அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் சங்கத் தலைவர் ஜெனரல் சத்பீர் சிங் நம்மிடம், “1971-க்குப் பிறகு 54 போர்க்கைதிகளை மீட்பதில் இதுவரை எந்த அரசுமே தீவிர முயற்சி செய்யவில்லை. 1988-ல் ஒருமுறை, சார்க் நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில், 54 போர்க்கைதிகள் விவகாரம் முதன்முறையாக பாகிஸ்தானிடம் எழுப்பப்பட்டது. இந்திய பிரதமரான ராஜீவ் காந்தி, 54 போர்க்கைதிகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் புட்டோவிடம் கேட்டார். அதற்கு புட்டோ, தங்களிடம் உள்ள போர்க்கைதிகள் 54 பேர் அல்ல, 42 மட்டும்தான் என அளித்த பதில் சார்க் அமைப்பின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது. இந்தக் கைதிகள் பாகிஸ்தான் சிறைகளில் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தம் சிறை அறைகளில் இரவு நேரங்களில் கதறியது பல வெளிநாட்டினர் எழுதிய நூல்களிலும் பதிவாகியுள்ளது. இந்தப் பதிவுகள் இந்திய கைதிகளின் அருகில் இருந்த சிறையறைகளில் அடைக்கப்பட்ட வெளிநாட்டவர்கள், நூலாசிரியர்களிடம் அளித்த வாக்குமூலங்கள்” என்றார்.

“1971 போரில் இந்தியாவிடம் சுமார் 93,000 பாகிஸ்தானிய போர்க் கைதிகள் சிக்கியிருந்தனர். இவர்களை சிம்லா ஒப்பந்தத்துக்குப் பின் இந்திய அரசு விடுவித்தது. ஆனால், நம் 54 போர்க்கைதிகளைப் பற்றி அப்போது கேட்க மறந்தது. 54 போர்க்கைதிகளின் குடும்பத்தார் சார்பில் முன்னாள்  ராணுவத்தினர் அமைப்பு ஒன்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன் பொதுநல வழக்குத் தொடுத்தது. அதில் இடப்பட்ட உத்தரவுக்குப் பின் 54 குடும்பத்தினருக்கும் கடந்த ஆறு வருடங்களாக ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறையில் அமர்ந்திருக்கும் உயர் அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய கவனம் கொடுக்காததே காரணம்” என்கிறார் சத்பீர் சிங்.

 54 போர்க் கைதிகளின் விவகாரம், தெற்காசிய மனித உரிமை அமைப்பின் கனடா பிரிவில் புகார் அளித்தும் பயன் இல்லாமல் போனது. இதற்காக அமெரிக்க அரசிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. அபிநந்தன் விடுதலைக்குப் பிறகாவது 54 போர்க்கைதிகள் பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எழுப்புவது அவசியம். இதன்மூலம், 54 பேரில் உயிருடன் உள்ளவர்களும், இறந்துபோனவர்களின் அஸ்தியும் இந்தியா வந்துசேர வழி ஏற்பட வேண்டும்.

எதற்கெடுத்தாலும் போர் தொடுக்க வேண்டும் என்று அவரவர் வீட்டில் உட்கார்ந்துகொண்டு கூக்குரல் இடுவதற்கு முன்பு போரில் கலந்துகொண்டு தம் வாழ்க்கையைத் தியாகம் செய்த இதுபோன்ற வீரர்களின் நிலையையும் நினைத்துப் பார்ப்பது அவசியம்.