தேனி மக்களவைத் தொகுதியில் பணத்தை தண்ணீராக வாரி இறைக்கும் ஓபிஎஸ் குடும்பம்: தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு


இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உரக்கச் சொல்ல வேண்டிய இந்தத் தருணத்தில் உபி தலைநகர் லக்னோவில் பாலத்தில் பழம் விற்றுக்கொண்டிருந்த காஷ்மீர் சகோதரர்களை, கும்பல் ஒன்று கழியால் அடித்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்படியாவது நம் இந்திய திருநாட்டுக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று நாட்டுக்கு வெளியில் இருக்கும் அன்னிய சக்திகள் பலவாறு முயன்று பார்க்கின்றன. அதை உணராமல், காஷ்மீர் சகோதரர்களை முஸ்லிம்கள் என்று பிரித்து அடையாளம் காட்டுவதும், அவர்களைக் கண்மூடித்தனமாய் தாக்கி அச்சுறுத்துவதும் காலம் காலமாக நாம் கட்டிக்காத்து வருகின்ற இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு நாமே ஊறு விளைவிப்பது போல் அல்லவா ஆகிவிடும். விரும்பத்தகாத இத்தகைய நிகழ்வுகள் நமக்குள் நாமே வெறுப்புணர்வை விதைப்பதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்பதை அனைவருமே புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மைத் துண்டாட நினைக்கும் பொது எதிரிகள் நாட்டுக்கு வெளியில் இருக்கிறார்கள். அதை உணராமல், நம்மோடு அண்ணன் தம்பியாய் பழகிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு வேறெங்காவது அவர்கள் தாக்குதல் நடத்துவதும் நம்மை பலவீனப்படுத்த நினைக்கும் எதிரிகளுக்குத்தான் பலம் சேர்க்குமே தவிர, நமக்கு எந்தப் பலனையும் தந்துவிடாது.

தேசத்துக்கு எதிரான தீவிரவாதத்தை முறியடிக்கும் போரில் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. இந்தச் சமயத்தில் சாதி, மதம் கடந்து நாம் அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள் என்ற கர்வத்துடன் மூவர்ண கொடியின் கீழ் அணிவகுத்து நிற்போம்; நம்மைத் துண்டாட நினைக்கும் எதிரிகளுக்கு இடமளிக்காமல் இருப்போம்!