ப.சிதம்பரம் போல கண்ணாடி வழியாக தொகுதியை பார்க்க மாட்டேன்: சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா பேச்சு


ரிஷபன்

ஒருநாளு என்னோட வாழ்க்கைத் துணையும் எதிர் வீட்டுப் பெண்மணியும் ஏதோ பரபரப்பா பேசிட்டிருந்தாங்க. நான் படியேறி வர்ற சத்தம்  கேட்டதும், "நான் அப்புறமா வரேன்" என்று சொல்லிட்டு ஓடினார் அந்தப் பெண்மணி. போறப்ப என்னைப் பார்த்துட்டு ஒரு மிரட்சி. என்னாச்சு இந்தம்மாவுக்கு... எதுக்கு நம்மளப் பார்த்து இப்புடி மிரண்டு ஓடுதுனு யோசிச்சிக்கிட்டே உள்ள வந்து என் வொய்ஃப்கிட்ட விசாரிச்சேன்.  “ஒண்ணுமில்ல”னு மலுப்பிட்டு கிச்சனுக்குள்ள போனா. பின்னாடியே போய் மறுபடி கேட்டேன்.  “என்னன்னு சொல்லு” இந்தத் தடவ என்னையும் அறியாம குரல் கொஞ்சம் ஒசந்திருச்சு. பின்னே... விஷயத்தைச் சொல்லாம பிகு பண்ணுனா எரிச்சல் வருமா வராதா சார்...

“இதான்... இதைத்தான் அவங்க சொல்லிட்டுப் போறாங்க...  ‘இப்பல்லாம் உங்க வீட்டுக்காரர் குரல் சத்தமாக் கேக்குதே... பீபி செக் பண்ணியா... கீழ குப்பைலாரிக்காரன்கிட்டகூட, இங்கே ஏன் வீடு வாங்கிகிட்டு வந்தேன்.. வீட்டை வித்து தொலைச்சிடறேன்னு குய்யா முறையோன்னு கத்திட்டுப் போனாரே... என்னாச்சு அவருக்கு’னு கேட்கறாங்க” என்றாள் அழாக்குறையாக.

இது ஏதுடா வம்பு... குடியிருக்கவங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கணும்னு கொஞ்சம் சத்தமா கேட்டா வியாதிக்காரன் ஆக்கிருவாங்க போலிருக்கே... வரவழைத்துக்கொண்ட எக்ஸ்ட்ரா பொறுமையுடன் சொன்னேன்.  “என்னம்மா... போன வாரம்தானே உனக்கு செக்கப் போனப்போ விளையாட்டா  ‘எனக்கும் பீபி பாரு... இவளால எனக்கு ஏறியிருக்கா’னு அந்த  நர்ஸ்கிட்ட காமெடியா சொன்னேனே. அவங்களும் செக்கப் பண்ணி பார்த்துட்டு  ‘நார்மல்’னு சொன்னாங்களே...”

ம்ஹும். என் வேடிக்கைப் பேச்சை மீறி என் பொறுமையின்மை கண்ணுல தெரிஞ் சிருச்சு. சனியன் பிடிச்ச கண்ணு... பல நேரங்கள்ல இப்படித்தான் காட்டிக் குடுத்துடுது. நம்ம கண்ணு மாதிரி கூடவே இருந்து குழி பறிக்கிற டைப்பு வேற எதுவும் இல்லை.  “அது இல்லீங்க... இப்பெல்லாம் நீங்க எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறாப்ல இருக்கு.’ சொல்லும்போதே அவ கண்ணுல தெரிஞ்ச பயத்தைப் பார்த்து எனக்கு  சுர்ர்ரென்று கோபம்

வந்துச்சு. ஆனாலும், அடங்குடா அடங்குடானு மனசுக்குள் ஜெபிச்சுக்கிட்டே பொறுமையா கேட்டேன்.  “சரி... இப்ப என்ன செய்யலாம்?” நான் எப்படா இப்படிக் கேட்பேன்னு  எதிர் பார்த்தே இருந்திருப்பா போல... அத்தனை மலர்ச்சியாய் என் எதிர்ல வந்து உட்கார்ந்தாள்.

“நம்ம தெருவுலயே இப்போ யோகா, தியானம் எல்லாம் சொல்லித் தராங்களாம். மனசு அப்படி ஒரு அமைதி ஆயிருதாம். ஒரு வாரம் கிளாஸ் போனாப் போதுமாம். அப்புறம் டெய்லி வீட்டுல பிராக்டீஸ் பண்ணணும்”என்றாள். ரொம்ப யோசிக்காமல், “எப்ப போகணும்?” என்றேன். சாயங்காலம் ஆறரை மணிலருந்து எட்டரை மணி வரைக்கும் ஒரு கிளாஸ் இருக்கு. அதுதான் உங்களுக்குச் சரிப்பட்டு வரும்” என்றாள்.  அரை மனசோட சம்மதிச்சேன்; வேற வழி! அப்படி நான் சம்மதிக்காட்டா எதிர்வீட்டு மாமியும் இவளுமாய் சேர்ந்து என்னைய ஆம்புலன்ஸ்ல ஏத்தி ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிடுவாங்க போல தெரிஞ்சுது.

யோகா கிளாஸுக்கு நான் சம்மதிச்சதும் அவ முகத்துல அம்புட்டு சந்தோசம் பாருங்க. தாலிச் சரடை எடுத்து கண்ணுல ஒத்திக்கிட்டா. நானே விலாசம் விசாரிச்சு கிளம்பிப் போனேன். அந்த வீட்டு மாடியில பெரிய ஹால்ல வகுப்பு. யோகா மாஸ்டர் சின்னப் பையனாத் தான் இருந்தாரு. பத்துப் பதினஞ்சு பேரு கிளாஸுக்கு வந்திருந்தாங்க. அதுல சிலரோட முகங்கள் கடுகடுன்னு இருந்துச்சு.  என்ன மாதிரி  நியூ அட்மிஷன் போலருக்கு! ஒண்ணு ரெண்டு பேரோட முகத்துல அலாதி சாந்தம்.

என்னடான்னு விசாரிச்சுப் பார்த்தா, அதுல ஒருத்தருக்கு கல்யாணமே ஆகலை. இன்னொருத்தரோட மனைவி வெளியூர்ல  பேத்தியைப் பார்த்துக்கிறதுக்காக மகனோட இருக்காங்க. அவரு மட்டும் இங்க தனியா இருக்காராம். அப்புறமென்ன... மகிழ்ச்சிக்கு பஞ்சம்!

யோகா மாஸ்டர் நல்லாத்தான் பேசுனாரு.  “நம்ம மனசை நம்மோட வழிக்குக் கொண்டு வர்றது ரொம்ப ஈஸி... வீட்டுல நம்ம மனைவிகூட நம்ம சொல்றதைக் கேக்க மாட்டாங்க. ஆனா, சொல்றபடி சொன்னா மனசு கேக்கும்’’ இதக் கேட்டுட்டு அங்கருந்த சில பேரு மட்டும் சிரிச்சாங்க; ரொம்ப பாதிச்சிருப்பாங்க போல!

 “எல்லாரும் மூச்சை இழுத்து விடுங்க” என்று மூச்சுப் பயிற்சில இருந்து ஆரம்பிச்சாரு மாஸ்டர். எனக்குப் பக்கத்துல இருந்தவரு வெங்காயச் சாம்பாரு ஊத்தி ஈவினிங் டிபனைக் ஒரு கட்டு கட்டிட்டு வந்திருப்பாரு போல. அவரை தள்ளி இருக்கச் சொல்ல எனக்கு துணிச்சல் இல்லாததால நானே கொஞ்சம் நகர்ந்து உக்காந்தேன். அந்தப் பக்கம் இருந்தவரின் தொப்பை இடிச்சுச்சு. இதுகள வெச்சுக்கிட்டு என்னத்த யோகா பண்றதுனு நான் யோசிச்சுட்டு இருக்கும்போதே வார்ம் - அப் பயிற்சிக்குப் போயிட்டாரு மாஸ்டர்.

எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை, காலை ஆட்டி பயிற்சி எடுத்தாங்க. நானும் அவங்களோட சேர்ந்து கையக் காலை ஆட்டுனேன். பயிற்சி முடிஞ்சதும் ஆளுக்கு ஒரு பேரிச்சம்பழம் கொடுத்தாரு மாஸ்டர். அவருக்கிட்ட  இன்ணொண்ணு கேட்க ஆசையா இருந்துச்சு. அந்த ஆசையை அப்படியே அடக்கிக்கிட்டேன். “நடந்தே போயிட்டு வாங்க... நம்ம தெருக் கடைசிதானே” என்று வீட்டம்மா சொல்லி இருந்ததால நடந்தே வந்திருந்தேன். நடந்தே வீட்டுக்குத் திரும்புனேன்.

கிளாஸ் முடிஞ்சு படியேறி வீட்டுக்குப் போனேன். உள்ள டிவி சத்தத்தை மீறி வொய்ஃப் போட குரல்; யாருக்கிட்டயோ அவ்வளவு ஆனந்தமா அலைபேசியில அரட்டை. “ஹப்பா... தொணதொணன்னு எதையாச்சும் சொல்லி... ஒரு சீரியலையும் உருப்படியா பார்க்க விட மாட்டார்... உங்க ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆச்சு. யோகா பண்ணச்சொல்லி அனுப்பி விட்டாச்சு. ஆமா, சரியாவே பார்க்கல... அவளுக்கு சூனியம் வச்சாங்களே எப்படி சரியாச்சு...” என்று அவள் பேசப் பேச எனக்கு பீபி தலைக்கு ஏறி தாண்டவம் போட ஆரம்பிச்சிருச்சு!