திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரம்;  அப்போது ஜெயலலிதா உயிரோடு தான் இருந்தாரா?- ஸ்டாலின் கேள்வி


உ.சந்தானலெட்சுமி

சர்வதேச மகளிர் தினம் நெருங்கிய தருணத்தில் கடந்த வாரம் யூ-டியூபில் வெளியான ஒரு குறும்படம், சுமார் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரப்பரப்பாகப் பேசப்பட்டது. ‘யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி’ எனப் படத்தின் தலைப்பே (Yours Shamefully) வித்தியாசமாய் தெரிந்ததால் அப்படி எதைத்தான் அந்தப் படம் பேசுகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் நானும் யூ-டியூபில் எட்டிப்பார்த்தேன்.

படத்தின் தொடக்கமே, ‘இதுவொரு உண்மை சம்பவம்’ என்றது. உண்மை எது, பொய் எது என்று பகுத்தறியாமல் வலைதளங்களில் வைரலாகப் பரப்பிவிடும் விஷயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும், பெண்களுக்கான சுதந்திரத்தை சிலர் எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்தப் படம் நெற்றிப்பொட்டில் அடிக்கும் வசனங்களால் நிகழ்கால புரிதலுடன் பேசுகிறது.

சரியான தருணத்தில் சரியான விஷயத்தை ‘வைரல்’ தலைமுறைக்கு வைரலாகவே கொடுத்திருக்கிறார் இந்தக் குறும்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். சினிமா உலகம் மட்டுமல்ல, படத்தைப் பார்த்த பலரும் விக்னேஷுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இப்படியொரு தில்லான கதையை எடுத்தவரை நாமும் வாழ்த்தாவிட்டால் எப்படி? டைம் கேட்டு வாங்கிக்கொண்டு விக்னேஷை நேரில் சந்தித்தேன். நான் போனபோது, படத்தில் நடித்த நாயகி சவுந்தர்யாவும் அங்கு இருந்தார். முதலில் விக்னேஷ் ஆரம்பித்தார்.

 “இந்த மாதிரி வைரல் செய்திகளை நாம எல்லாருமே கடந்துதான் வந்திருப்போம். கடந்து வந்துட்டாலும் பரவாயில்லை... அதுக்குள்ள இருக்கிற உண்மைத்தன்மையைத் தெரியாமலே மத்தவங்களுக்கு ஷேர் செய்கிறோம். இதனால, எத்தனை பேர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாங்கன்னு நமக்குத் தெரியறதும் இல்லை; அதைப் பத்தி நாம் கவலைப்படுறதும் இல்லை. வைரலில் மயங்கிக் கிடக்கும் வலைதள சமூகத்துக்கு அதை பளிச்னு உணர்த்தணும்னுதான் இப்படியொரு கருவை மையமா வெச்சு இந்தக் குறும்படத்தை எடுக்க முடிவு செஞ்சேன்.

கதை இதுதான்னு முடிவு செஞ்சப்பவே இது நிச்சயம் சக்ஸஸ் ஆகும்னு எனக்கு 200 பர்சென்ட் நம்பிக்கை இருந்துச்சு. அதுபோல இப்ப நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அனைவரும் படத்தைப் பார்த்து பாராட்டுறாங்க” என்றார் விக்னேஷ்.

தொடர்ந்து பேசிய சவுந்தர்யா, “முழுக்கதையும் எனக்குத் தெரியும். அதனால, அப்பவே கார்த்திகிட்ட சொன்னேன்; சூப்பரா இருக்கு நிச்சயமா எல்லோருக்கும் புடிக்கும்னு. ஆரம்பத்துல இந்தக் கதையில நான் நடிக்கிறதாவே இல்லை. திடீர்னு, ‘நீதான் நடிக்கிறே’னு இவரு சொன்னப்ப, கொஞ்சமில்ல... நிறையவே யோசிச்சேன். பட், நல்லவொரு மெசேஜ் உள்ள கதையில் நாமளும் ஒரு பார்ட்டா இருப்போம்னு உள்ளுக்குள்ள தோணுச்சு; உடனே சரி சொல்லிட்டேன். ஆனா, படத்துக்கு இந்தளவுக்கு வரவேற்பு குவியும்னு நினைச்சுக்கூட பார்க்கலை. அந்தளவுக்கு நாங்க சொல்ல வந்த மெசேஜ் சரியாய் போய்ச் சேர்ந்திருக்கு” என்றார்.

“அப்டினா படத்துல வர்ற மாதிரி, சமூக வலைதளங்களைப் பெண்கள் தப்பா பயன்படுத்துறாங்களா... ‘மீ டு’ மூவ்மென்ட் எல்லாம் பெண்களுக்கான நல்ல விஷயம்தானே?” என்று கேட்டதற்கு, “பொண்ணுங்க சொன்னா எல்லாருமே நம்பிடுவாங்கன்னு நினைச்சு உங்களுக்குத் தந்திருக்கிற வாய்ப்பைத் தப்பா பயன்படுத்தாதீங்கனு தான் நாங்க படத்துல சொல்றோம். ‘மீ டு மூவ்மென்ட்’ ரொம்ப நல்ல விஷயம்தான். இதைப் பயன்படுத்தி பெண்கள் தங்களின் பாதிப்புகளை தைரியமா பொது வெளிக்குக் கொண்டுவரலாம். அதேநேரம், நம்ம சொன்னா நம்பிடுவாங்கன்னு தப்பாவும் சில பேரு அதைப் பயன்படுத்துறாங்களே... அப்படித் தவறா பண்ணாதீங்கன்னுதான் சொல்றோம்.

க்ளைமாக்ஸ்ல நாங்க இரண்டு பேரும் தற்கொலை செஞ்சுகிற மாதிரி இருக்கும். அதைப் பார்த்த எல்லாருமே, ‘ தற்கொலை முடிவு தப்பு. இப்படி சீன் வைக்கக்கூடாது’னு சொன்னாங்க. அந்தக் கருத்தை நாங்க தலை வணங்கி ஏத்துக்கிறோம். இந்தக் கதைக்கு அந்த எமோஷனல் முடிவு தேவைதான்னு சீன் வச்சோம். மத்தபடி, நாங்க சொல்ல வந்த விஷயத்தை எல்லாருமே சரியா புரிஞ்சுக்கிட்டாங்க.

இந்தக் குறும்படம் மூலமா நாங்க வைக்கிற ரெக்வெஸ்ட், ஒரு நியூஸைப் பார்த்ததுமே அதுக்குப் பின்னாடி இருக்கிற உண்மை என்னன்னு தெரியாம மத்தவங்களுக்குப் பகிராதீங்க. செய்தியில் இருக்கும் நபரைப் பத்தி உடனே நீங்களே ஒரு முடிவுக்கும் வந்துடாதீங்க. நம்ம பண்ற ஒரு ஷேர் கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருத்தரோட வாழ்க்கையை எப்படி வேணும்னாலும் புரட்டிப்போடலாம்கிற ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்துட்டே இருக்கணும். சோஷியல் மீடியாவுல நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. ஆனா, அதை நாம எப்படிக் கையாள்றோம்கிறதுல இன்னொருத்தரோட லைஃபே இருக்கு. இதை சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும் அத்தனை பேரும் உணரணும். மத்தபடி நாங்க பெண்களின் உணர்வுகளை மதிக்கிறோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை, குற்றங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் - அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்!” என்று இருவருமே ஒரு குரலாய் ஒலித்தார்கள்.

பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களைப் பேசுவதில் சமூக ஊடகங்களின் பங்கை மறுப்பதற்கில்லை. அதேசமயம், ‘டிக் டாக்’ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக ஒரு சில பெண்கள் ஆபாசக் கூத்தடிப்பதையும் அவ்வளவு எளிதாய் புறந்தள்ளிவிட முடியவில்லையே!

படம்: பு.க.பிரவீன்