பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: உதயநிதி வேதனை


கே.கே.மகேஷ்

தேர்தல் சமயம் என்பதால் அம்மா பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். தண்ணியிலேயே தயிர் கடைபவர் என்று பெயரெடுத்த ஓ.பன்னீர்செல்வமே மதுரையிலும் தேனியிலும் நடந்த விழாக்களில் எட்டாம் வள்ளலாக அவதாரம் எடுத்தார்!

பெரியகுளத்தில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நல உதவிகள் வழங்கி, 71 ஜோடிகளுக்கு இலவசத் திருமணமும் செய்துவைத்த ஓபிஎஸ், 25 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்கினார்.

“பொங்கலோ பொங்கல்... எடப்பாடி பொங்கல்... ஓபிஎஸ் பொங்கல்... என்று வீடுதோறும் முழக்கம் கேட்டது என்றால் என்ன காரணம், நமது அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுதானே?” என்று மதுரை விழாவை ஆரம்பித்து வைத்தார் தலைமைக்கழக பேச்சாளர் ஏங்கல்ஸ். விழாவுக்கு வரும் வழியில்... இரட்டை இலை, தாமரை, மாம்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையை ஓபிஎஸ்ஸுக்கு அணிவித்தார் விளம்பரப் பிரியர் கிரம்மர் சுரேஷ். அதையே தாம்பூலத்தில் வைத்தும் கொடுத்தார். அதிமுக, பாமக, பாஜக கூட்டணியை ‘இலை பிளஸ் பூ பிளஸ் கனி ஈக்குவல் டு கொட்டை’ என்று சமூக வலைதளங்களில் வறுத்துக்கொண்டிருக்கிற நேரத்தில் இது வேறயா என்று சிரித்தார்கள் அதிமுக நிர்வாகிகள்.

மேடையின் ஓரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு மாலை போடப்பட்டிருந்தன. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஜெயலலிதா மேடைக்கு வரும்போது, ‘தொட்ட இடம் துலங்கவரும் தாய்க்குலமே வருக’ என்ற பாடல் ஒலிப்பது வழக்கம். ஓபிஎஸ் மேடைக்கு வந்ததும் சரியாக அந்தப் பாடலை ஒலிக்கவிட, அவர் பயபக்தியோடு அந்தப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த பில்டப் காரணமாக, அம்மாவே வந்துவிட்டதுபோல சில தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.

ஒபிஎஸ்ஸுக்கு முன்னதாக வேட்டியை இறுக்கிக் கட்டியபடி வந்து மைக் பிடித்தார் செல்லூரார். “தென்பாண்டி மன்னன், நம் அண்ணன், அண்ணன் பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும், நீங்க கொடுக்கிற கரகோஷத்துல ஸ்டாலினுடைய காது செவிடாகணும் என்ன...” என்று சொல்லிவிட்டுப் பேச ஆரம்பிக்க, ‘ஓபிஎஸ்ஸுக்குத்தானே கை தட்டச் சொல்கிறார்’ என்று கூட்டம் சைலன்டாக இருந்தது. “என்னய்யா... நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க கை தட்டலைன்னா எப்படி?” என்று கழகத்தினரை அன்பாகக் கடிந்துகொண்டார் அமைச்சர்.

“புரட்சித் தலைவரை சாதாரண நடிகர்தானே என்று எடை போட்டார் டாக்டர் கலைஞர். சர்வ வல்லமை படைத்தவர், சாணக்கியர், அத்தனை திறமையும் உள்ளடக்கியவர், எதிரிகளைக்கூட சிரித்துப்பேசி வளைத்துப் போடும் அவரே எம்ஜிஆர் பின்னால் நிற்பவர்களை விசிலடிச்சான் குஞ்சுகள்னு நினைச்சாரு. ஆனா, ஆறே மாசத்துல நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தல்ல திமுகவை மூணாவது இடத்துக்குத் தள்ளி, பிறகு ஆட்சியையும் பிடிச்ச இயக்கம் அண்ணா திமுக. ஆளானப்பட்ட கலைஞருக்கே அந்த கதி. இது தெரியாம, ‘அம்மா இல்லை, இவங்க எல்லாம் தாயில்லாப் பிள்ளைதான, இவங்கள ஒரு வழி பண்ணிடலாம்’னு ஸ்டாலின் நினைக்கிறாரு. ‘திமுக  ஒரு தீயசக்தி; அதை அழிக்கும் வரையில் அண்ணா திமுக ஓயாது’னு புரட்சித்தலைவரும் சொன்னார்; அம்மாவும் சொன்னாங்க. ஆனா, உண்மையிலேயே திமுகவை அழித்து ஒழிக்கப்போவது அண்ணன் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும்தான். இந்தத் தேர்தலோடு திமுகவின் சகாப்தம் முடிஞ்சு, திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவாக அது மாறிவிடும். அதுதான் அம்மா பிறந்த நாள்ல நாம் எடுக்கிற சபதம்” என்று முடித்தார் செல்லூரார்.

இடையில் ஓபிஎஸ்ஐ புகழ்வதாக நினைத்துக் கொண்டு, “நம்ம அண்ணன் பொறுமையின் சிகரம். பொறுமைன்னா அண்ணனைத்தாங்க சொல்லணும். எங்களுடைய பரதன்ங்க அவரு. அம்மா மூணு முறை அண்ணனை முதல்வர் நாற்காலியில உட்கார வெச்சு அழகு பார்த்தார். அண்ணன் முதல்வராவா அந்த ஸீட்ல உட்கார்ந்தாரு; ஒரு செருப்பு மாதிரி உட்கார்ந்திருந்தாரு. எப்படி ராமாயணத்துல பரதன், ராமரோட செருப்பை அரியணையில வெச்சு ஆட்சி செய்தானோ அப்படி ஆட்சி செஞ்சார்” என்று சொல்ல ‘போப்பா அங்கிட்டு... அதையெல்லாம் ஞாபகப்படுத்திட்டு’ என்பது போல் ஓபிஎஸ்ஸின் முகம் வாடிப்போனது.

தனது பேச்சுக்கு நடுவில் செல்லூர் ராஜூவுக்காக ஒரு சின்ன ஊசியைச் செருகினார் ஓபிஎஸ். “விழாவுக்கு வந்திருக்கிற எல்லார் பேரையும் சொல்லிட்டேன். ஒருவேளை யாரோட பேராச்சும் விடுபட்டுப் போயிருந்தா, அதுக்கு நான் காரணமல்ல... டிக் பண்ணிக் கொடுத்தவங்க யாருன்னு தீர விசாரிச்சு, அவங்களுக்கு உரிய தண்டனையை நீங்களே வழங்கும்படி கேட்டுக்கிறேன்” என்றார் ஓபிஎஸ்.

பெரியகுளத்தில் நடந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ் பற்றிய ‘ரகசியம்’ ஒன்றைச் சொல்ல, ‘இவங்க நம்மள புகழ்றாங்களா, இல்லை நம்மள வெச்சு காமெடி கீமெடி பண்றாங்களா?’ என்று சீரியஸாக யோசிக்கத் தொடங்கிவிட்டார் ஓபிஎஸ். “இங்க நான் ஒரு ரகசியத்தைச் சொல்றேன். இதுவரை ஐந்து முறைக்கு மேல விஜயகாந்த் அண்ணனுடன் நம்முடைய அண்ணன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கார். ஒருவரியாவது அந்தச் செய்தி வெளியே வந்ததா? அண்ணனோட செயல்கள் எல்லாமே இப்படி ரகசியமாத்தான் நடக்கும்” என்றார். கூடவே, “தம்பி ரவீந்திரநாத் (ஓபிஎஸ் மகன்) போன்ற இளைஞர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும். அவருக்காக விருதுநகர் தொகுதி காத்திருக்கிறது” என்று உதயகுமார் சொன்னபோது ஓபிஎஸ் முகத்தில் அர்த்தப் புன்னகை.

ஆளாளுக்கு காமெடி செய்கிறபோது உதயா மட்டும் சும்மா இருப்பாரா? வைகோவை வம்பிழுத்தார். “ ‘நான் உயிரோடு இருக்கும் வரையில் மு.க.ஸ்டாலினை முதல்வராக விட மாட்டேன்’ என்று சொன்ன வைகோ, இப்ப ‘மு.க.ஸ்டாலினை முதல்வராக்காம தூங்க மாட்டேன்’

என்கிறார். அய்யோ பாவம், ஸ்டாலின் எப்ப முதல்வராவது... இவர் எப்ப தூங்குறது? வாழ்நாள் முழுக்க தூக்கமில்லாமல்தான் இருக்கப் போறாரு வைகோ” என்று உதயகுமார் சொல்ல கலகலத்தது சிரித்துவிட்டு கலைந்தது கூட்டம்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி