செல்ஃபி எடுக்க குழந்தைளாஇ அழைத்து வந்து தொல்லை தரும் போலீஸ் அதிகாரிகள்: காவல் ஆணையரிடம் தோனி புகார்?


கணேசகுமாரன்

மத்தி

கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்: ச.துரை

வெளியீடு: சால்ட் பதிப்பகம்

விலை: 80 ரூபாய்

தொடர்புக்கு:

கோடம்பாக்கம்,

சென்னை 24

தொலைபேசி: 89394 09893, 74488,36430

டைனோசர் எலும்பைப்போல மிதக்கும் கிடாரிலிருந்து எவ்விதமான இசை எழும்பக்கூடும்? நெய்தலிலிருந்து புரண்டு வந்திருக்கிறது ச. துரையின் கவிதைகள். ஒவ்வொரு கவிதையிலும் மிச்சமிருக்கும் அலையின் நுரைகள் வலிக்க வலிக்க நம்மைத் தீண்டுகின்றன. அவ்வப்போது வெகு தளர்வாக சிறு விளையாட்டும் விளையாடுகிறார். அது இவ்வாறாக இருக்கிறது. மகளை ஆப்பிளாக்கி அவள் குடுமியை ஆப்பிள் காம்பாக்கி...உப்புக் கடலை இரு உள்ளங்கையில் நிரப்பி உதடுகள் குவித்து ஊதுகையில் நிறைய நீலம், ஒரு மாலுமி, உடைந்த கப்பல், பனியன் அற்ற சிறுவன் என இப்பிரபஞ்சம் முழுதும் கவித்துவத்தை முத்தமிடுவதில் வாசகர் கண்களில் உப்பெரிச்சல்.

நீதான் நீயேதான்

பழஞ்சேர்த்தி

ஞாபக அழுத்தி

நினைவடர்த்தி

மீள்மனதி.

சற்றே காலம் நீலமாய் புரண்டு படுக்கிறது துரை. வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் நுழைய கதவுகளேயில்லைதான். ஆனால் இருளுக்குள் இருந்து இன்னொரு இருளுக்குள் நுழைய நிறைய தடுப்புகள் இருக்கின்றன. எல்லாத் தடைகளையும் தகர்த்துவிட்டு இருளுக்குள் நுழைபவர்கள் பாக்கியவான்களே. கர்த்தரை தூண்டில் இரையாக்கும் துரைக்கு வாலை மீன் மட்டுமே இரைப்பையில் இருக்கிறது. அதனாலோ என்னவோ குறைவான வாலை மீன்களுக்கு ஏகப்பட்ட இரையினை கடலுக்கு பலி கொடுக்கிறார். வாசகருக்கு வேண்டியதும் வாலை மீன்களே. கர்த்தரல்ல.

பிஞ்சின் பசிக்கு அணுகுண்டை விளையாடக் கொடுக்கும் தாயொருத்தி. நடப்பரசியல் பேசும் கவிதையின் முடிவில் அது வெடிக்காத அணுகுண்டெனக் கூறும் கவிஞரின் கூற்றை வாசகராகிய நாமும் நம்புவோம். தனது நிலமொழி மூலமாக அரசியல் பேசிப்போகும் கவிஞர் அதற்கு தன் நிலத்தை மட்டுமே கையாள்வதில்லை. தான் கால் நனைத்த கடல் எவ்வாறெல்லாம் காலப்போக்கில் உருமாறியது எனக் கண்ணீரை கூடுதல் உப்புடன் கையாள்வதிலிருந்தே இழந்த நெய்தல், வாசகர் மனதையும் இறுக்கப் பின்னுகிறது. ‘பூனைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி’ கவிதை முன்வைக்கும் கடைசி வரியில் வாசகரைக் குற்ற உணர்வில் தள்ளுகிறது. கவிஞரின் பார்வையில் ரப்பர் மேனி என்பதால் அது பச்சை பாம்பாக உருமாறுகிறது. விஷமற்ற பாம்பென உருவகித்து ‘நான் தற்போது பச்சை பாம்பு. நீங்கள் எளிதாக அடித்து விளையாடலாம்’ என்கிறார் துரை. பச்சைப் பாம்பின் எலும்புக்கூட்டின் அசைவிலும் விஷம் இருக்கலாம் துரை.

வாசகரின் மீள் வாசிப்பினை வேண்டி சில கவிதைகள் இருந்தாலும் சப்தம் போன்ற கவிதைகள் எந்த வாசிப்புக்கும் உட்படாமல் மிக அந்நியப்பட்டு நிற்கின்றன. அதுபோல் அங்கங்கே தென்படும் எழுத்துப்பிழை இது ஒரு மாயக் கவிதையோ என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இது கவிஞரின் தவறாகக்கூட இருக்கலாம். அப்படி இருந்திருக்கக் கூடாது. ஒற்றைத் தலைவலிக்குத் தீர்வு புணர்தல் என்பார்கள். தீவிர புணர்ச்சியின் நடுவில் தோன்றும் தலைவலியே என்கிறார் கவிஞர். காலப்போக்கில் இது மாறக்கூடும். ‘கூர்க்கா உன் பழைய தொப்பி எங்கே’ கவிதை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய கவிதை. ஆப்பிள்கள் துரையின் பார்வையில் வேறு மாதிரி விளைகின்றன. நன்று. நெய்தல் நிலக் கவி என்பதாலோ என்னவோ அலைகளை நாயாக கற்பனை செய்கிறார். கடலின் குரைப்புதான் அலை எனும்போது அலையை தனித்துப் பார்க்கத் தேவையில்லை. யாரும் பார்க்காத பார்வையில் கடலினையும் பூவையும் பைத்தியத்தையும் துப்பாக்கியையும் வாசனையையும் மீன்களையும் வாழ்வையும் கவிதையையும் பார்த்த மாத்திரத்தில்கவனம் கவர்கிறார் ச. துரை.