மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பட்டாசுத் தொழிலாளர்கள் துயர் நீங்கும்- வைகோ உறுதி


கே.கே.மகேஷ்

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரி பார்க்கப் போன இடத்தில் ஓர் ஆச்சரியம். மதுரை ஒத்தக்கடை வாக்குச்சாவடியில் வாக்களிப்போர் பட்டியலில், ‘தயாளு, க/பெ. கலைஞர்’ என்ற பெயர் இருந்தது. கூடவே, கலைஞர், தமிழரசு, கனிமொழி, செல்வி உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தின் மற்ற பெயர்களும் இருக்க... அந்தக் குடும்பத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

ஒத்தக்கடை அருகே இருக்கும் வௌவால் தோட்டத்தில் இறங்கி, “இங்க கலைஞர் வீடு எங்கே இருக்கு?” என்று விசாரித்தேன். முதலில் சந்தித்த பெண்மணியே சொல்லிவிட்டார், “விவசாய கல்லூரி ஊழியர் குடியிருப்புல ஓட்டு வீடு பகுதிக்குப் போங்க...” என்று.

விவசாய கல்லூரி ஊழியர் குடியிருப்புகளில் மிகமிக வசதிக்குறைவான, சின்னச்சின்ன ஓட்டு வீடுகளைக் கொண்ட பகுதியில் இருந்தது கலைஞரின் வீடு. தன் பாட்டி சேதுவுடன் வாசலில் உட்கார்ந்தபடி புளியம்பழம் உடைத்துக் கொண்டிருந்தான், கலைஞர் - தயாளு தம்பதியின் மகன் உதயசூரியன்! அவரிடம் விஷயத்தைச் சொல்லி... குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விசாரித்தேன். அண்ணாதுரை, அஞ்சுகம், கலைஞர், தயாளு, தமிழரசு, கனிமொழி, செல்வி, (முரசொலி)செல்வம், உதயசூரியன், அறிவாலயம், ஆசைத்தம்பி, (எஸ்.எஸ்.)ராஜேந்திரன், தேன்மொழி என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது.

“எப்படிங்க இப்படி?” என்று கேட்டுக்கொண்டிருந்தபோதே, “எல்லாத்துக்கும் காரணம் எங்க பெருசுதான்” என்றபடியே ஹீரோ பைக்கில் வந்திறங்கினார் (வாலிபக்) கலைஞர் (வயது 40). “தாத்தாவோட பேரு டி.பி.ஆர்.மந்தைவீரணன். சொந்த ஊரு மேலூரு பக்கத்துல இருக்கிற தெற்குத்தெரு. அந்த ஊர்ல திமுக கிளையைத் தொடங்குனவரு. 1965-லேயே அண்ணாவை அழைச்சிட்டு வந்து, கட்சிக்கொடியேற்ற வெச்சவரு” என்று பழைய புகைப்படம் ஒன்றைக் காட்டினார் கலைஞர். அதில், அவரது தாத்தாவும் பாட்டியும் ஜோடியாய் இருக்க நடுவே உதயசூரியன் உதித்துக்கொண்டிருந்தது.

“அந்தக் காலத்து திமுககாரங்க எல்லாத்தையும் மாதிரியே, எங்க தாத்தாவும் கட்சிக்குச் செலவழிச்சே சொத்துப் பத்து எல்லாத்தையும் இழந்தாரு. குடும்ப நிலைமையைப் பார்த்திட்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு அரசாங்க வேலை கொடுக்க முடிவெடுத்தாங்க. அதிகம் படிக்காததால, விவசாய கல்லூரி வாட்ச்மேன் வேலைதான் கிடைச்சுது. குடும்பத்தோட இங்க வந்து குடியேறுனாரு. தன்னோட மகன்களுக்கு அண்ணாதுரை பெயரையும் கருணாநிதி பேரையும் வெக்கணும்ங்கிறது தாத்தாவோட ஆசை. குடும்பச் சூழலால முதல் பையனுக்கு (ராமமூர்த்தி) அந்தப் பெயரை வைக்க முடியாமப் போயிடுச்சாம். அதனால, 2வது மகனுக்கு அண்ணாதுரைன்னு பேரு வெச்சாரு தாத்தா. அடுத்து பிறந்தது எல்லாமே பொண்ணுங்க. அதனால, சேது, தென்றல், தமிழ்செல்வம், அருள்செல்வம், தேன்மொழினு பெயர் வெச்சிருக்காரு. ‘கருணாநிதிங்கிற பேரை பெண் பிள்ளைக்கு வைக்க முடியாதுன்னு, அதைத் தமிழ்ப்படுத்தி மகளுக்கு அருள்செல்வம்னு பெயர் வெச்சேன்’னு தாத்தா பெருமையாச் சொல்லுவார்” என்கிறார் மந்தை வீரணனின் மூத்த மகள் சேது.

“கருணாநிதி பெயரை பேரக்குழந்தைக்காவது வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட தாத்தா, தன் மகள் அருள்செல்வம் வழிப்பேத்திக்கு அஞ்சுகம் என்று பேரு வெச்சு, தன்னோட மகன் அண்ணாதுரைக்கு கட்டி வெச்சாரு. அண்ணாதுரை - அஞ்சுகம் தம்பதியோட மகனான எனக்கு கலைஞர்னு பேர் வெச்சதோட, என் தம்பிக்கு அறிவாலயம்னு பேர் வெச்சாரு. அதோடு நிற்கல தாத்தா. எனக்கு கட்டி வெக்கிறதுக்காகவே, தன்னோட மகள் சேது வழிப் பேத்திக்கு தயாளுன்னு தொலைநோக்குத் திட்டத்தோட பேர் வெச்சாரு. அவர் நினைச்ச மாதிரியே எங்களுக்குத் திருமணமாச்சு. ‘கலைஞருக்குப் பையன் பிறந்தால் உதயசூரியன்னுதான் பேர் வெப்பேன்’னு சொன்னாரு தாத்தா. ஆனா, பெண் குழந்தை பிறந்துருச்சு” என்று கலைஞர் சொல்லி முடிக்க தயாளு தொடர்ந்தார்.

“கருணாநிதின்னு பேர் வெச்சா கூப்பிடுறதுக்கு மரியாதையாக இருக்காதுன்னு என் வீட்டுக்காரருக்கு கலைஞர்னு பேர் வெச்சாராம் தாத்தா. என்னையும் ‘தயாளு’ன்னு யாரையும் கூப்பிடவிட மாட்டார். ‘தயாளு அம்மான்னுதான் கூப்பிடணும்’ என்பார். எங்களுக்கு ரெண்டாவதா பையன் பிறந்தான். அப்ப தாத்தா உயிரோட இல்லை. மு.க.அழகிரியைச் சந்திச்சி பேர் வெக்கச் சொன்னோம். ‘கலைஞர் - தயாளு மகனுக்கு என்ன பெயர் வைக்கிறது? என்னோட பெயரைத்தான் வைக்கணும்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார் அழகிரி. ‘இல்லண்ணே... எங்க தாத்தா உதயசூரியன்னு பேர் வெக்க ஆசைப்பட்டாரு’னு என் வீட்டுக்காரர் சொன்னார். உடனே, சரின்னு அந்தப் பெயரையே வெச்சுட்டாரு” என்று சொல்ல, அருகில் நின்ற உதயசூரியன் நம்மைப் பார்த்துப் பிரகாசிக்கிறான்.

மந்தைவீரணனின் இன்னொரு மகள் தேன்மொழியோ, “நான் சின்ன வயசுல பார்த்த விஷயங்களைச் சொன்னா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. அந்தக் காலத்துல திமுக கரை வேட்டி கட்டுன யார் சந்திச்சிக்கிட்டாலும் சொந்தக்காரங்க மாதிரி நலம் விசாரிப்பாங்க. வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உபசரிப்பாங்க. அப்பாவும் அப்படித்தான். கலைஞரையே குடும்பத்துல ஒருத்தராத்தான் நினைப்போம். எங்க வீட்ல அத்தனை கல்யாணத்துக்கும் கலைஞருக்கு பத்திரிகை அனுப்புவோம். அவரும் மணமக்கள் பெயரை தன் கைப்பட எழுதி வாழ்த்து அனுப்புவார். பி.டி.பழனிவேல்ராஜன், அப்பாவைப் பார்த்தா காரைவிட்டு இறங்கி வந்து பேசுவார். மதுரை முத்துல ஆரம்பிச்சி சமயநல்லூர் செல்வராஜ் வரைக்கும் எல்லாருக்கும் அப்பாவைத் தெரியும். எங்க குடும்பத்துல 8 பேருக்கு இந்த விவசாய கல்லூரிக்குள்ளேயே சின்னச்சின்ன வேலை கெடைச்சுது. எனக்கு வேலை வாங்குறதுக்காக, அப்ப இருந்த கூட்டுறவு அமைச்சர் (சங்கரன்கோயில்) தங்கவேலுவைப் பார்க்க மதுரை சர்க்யூட் ஹவுஸுக்குப் போயிருந்தோம். சரியான கூட்டம். அப்பா தன்னோட பேரையும், பிள்ளைகள் பெயரையும் எழுதி ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டார். அடுத்த நிமிஷமே அமைச்சர் வெளியே வந்து, ‘அய்யா... வாங்க வாங்க’ னு சொல்லி அழைச்சுட்டுப் போய் பேசினார்” என்றார்.

“இந்தியாவிலேயே முதன் முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவர் பெயரைத்தான் எனக்கு வெச்சாரு தாத்தா. கலைஞரோட தங்கச்சி அன்புதேவியை நான் கல்யாணம் செஞ்ச்சேன். என் மகளுக்கு கனிமொழினு பேரு வெச்ச தாத்தா, அவளை கலைஞரோட தம்பி அறிவாலயத்துக்குத் திருமணம் செஞ்சு வைக்கணும்னு நினைச்சிருந்தாரு. ஆனா, தாத்தாவோட மறைவுக்குப் பிறகு அது நடக்காம போயிடுச்சி. விவசாய கல்லூரியில திமுக கிளையைத் தொடங்குனதே எங்க தாத்தாதான். அவருக்கடுத்து அவரது மகன் அண்ணாதுரையும், பிறகு பேரன் கலைஞரும் கிளைச் செயலாளராக இருந்தாங்க. 350 வாக்குக்கு குறைவாக இருக்கிற கிளைகளை எல்லாம் அருகில் உள்ள கிளைகளுடன் இணைக்கணும்னு கட்சி முடிவெடுத்ததால, இந்தக் கிளையே இல்லாம போயிடுச்சி. பழையபடி 25 உறுப்பினர் கொண்டதுதான் ஒரு கிளைன்னு சொன்னா, எங்கள் வீடே ஒரு கிளைக்கழகமாகிடும். ஏன்னா இங்கேயே 25 உறுப்பினர்கள் இருக்காங்க” என்று சிரிக்கிறார் ராஜேந்திரன்!

குடும்பமே ஒரே கலைஞர் மயமாய் இருப்பதால் அதிமுக ஆட்சிகளில் அரசு நலத்திட்டங்களில் இவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களாம். முதல்வரின் காப்பீட்டுத் திட்ட அட்டை வாங்கப் போனால்கூட, ‘திமுககாரனுக்கு இங்க என்னப்பா வேலை?’ என்று அதிமுகவினர் கிண்டல் செய்வார்களாம். “இப்போது கூட வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு 2000 ரூபாய் வழங்குகிற திட்டத்துக்கு நாங்க மனு குடுக்கவே இல்ல. எப்படியும் தரமாட்டாங்க. எதுக்கு வீணா அலைஞ்சிக்கிட்டு?” என்கிறார் ராஜேந்திரன்.

கலைஞர் குடும்பத்தைச் சந்தித்துப் பேசிவிட்டு வீடு திரும்புகையில் இதே மதுரை மாவட்டத்தில் உள்ள வன்னிவேலன்பட்டி கிராமம் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு குடும்பம் அல்ல... ஊரில் உள்ளவர்களில் கால்வாசிப்பேர் மார்க்ஸ், லெனின், ஹோசிமின், ராமமூர்த்தி, டாங்கே, ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, உமாநாத், கியூபா, ரஷ்யா, கீழ்வெண்மணி என்று பெயர் வைத்திருப்பார்கள்.

தமிழக மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்குமான உறவே தனிதான் போல!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி