இஞ்சி இடுப்பழகன்!


inji-iduppazhagan

ரிஷபன்

அது எப்படி நிகழ்ந்தது என்று புரியவில்லை. வாளி நிறைய நீர்.  தூக்கி இன்னொரு பக்கம் வைக்கப்போனேன்... வந்தது வினை! முதுகு ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. அடுத்த அடி எடுத்துவைக்க முடியவில்லை.

"அம்மு.. அம்மு" என் மனைவியை அழைத்தேன். சாதாரணமாவே காதில் வாங்கமாட்டாள். பாத்ரூம் கதவு சாத்தியிருந்ததால் நான் கத்தியது உண்மையாகவே அவளுக்குக் கேட்கவில்லை. மெல்லமாய் நகர்ந்து லேசாகக் கதவைத் திறந்துகொண்டு, இடுக்கில் மாட்டிய எலியைப் போல மீண்டும் அபயக் குரல் எழுப்பினேன்.

"என்ன வேணும்" என்றாள் கிச்சனிலிருந்து.

"இடுப்பு பிடிச்சிருக்கு" என்றேன்.

"ச்சை.. விவஸ்தையே இல்லை உங்களுக்கு... எப்போ எதைச் சொல்லணும்னு தெரியாதா..." என்றாள்.

" அடிப்பாவி.. இங்கே வா" என்று அலறினேன்.

அதற்காக அவள் அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கம்போல மெதுவாகவே வந்தாள். என்னைப் பார்த்தாள். நான் இஞ்சி இடுப்பழகனாய் நின்றதைப் பார்த்துவிட்டு, " ஏன் என்னவோ மாதிரி நிக்கிறீங்க..." என்றாள். "இடுப்பு பிடிச்சுக்கிச்சு... நகர முடியலடீ’’ என்றேன்.

"என்ன பண்ணித் தொலைச்சீங்க?" என்று அத்தனை ‘அன்பாக’ கேட்டாள்.  “இந்த வாளியைத்தான் தூக்கினேன்...” என்று நான் அந்த வேதனையிலும் அசடு வழிந்தேன். தலையிலடித்துக் கொண்டவள், அப்படியே கைத்தாங்கலாக என்னை பெட்ரூமிற்கு அழைத்துச் சென்றாள். “பெட்ல உக்காருங்க” டிரில் மாஸ்டராய் அதட்டினாள். என்னால் உட்கார முடியவில்லை; கண்ணில் நீர் முட்டியது.

"அப்பவே எங்க வீட்டுல சொன்னாங்க. இவ்ளோ வெறப்பா இருக்காரே... நல்லா வச்சுக்குவாரான்னு...” என் வேதனை புரியாமல் டயலாக் பேசினாள் என் மனைவி. “இதோட எப்படி ஆபீஸ் போறது..?” என்றேன். “இப்ப அதுவா முக்கியம்... டிபன் எப்படிச் சாப்பிடுவீங்க... அப்படியே நின்னுக்கிட்டேவா?” என்றாள்.

அந்த நேரம் பார்த்து யாரோ காலிங் பெல்லை அழுத்தினார்கள். என்னை அப்படியே விட்டுவிட்டு ஓடிப்போய் கதவைத் திறந்தாள். வாசலில் அவளது அண்ணன். " இங்கே வந்து பாரு... இவர் செஞ்சு வச்சிருக்கத” என்று வந்ததும் வராததுமாய் அவரிடம் போட்டுக்கொடுத்து என் மானத்தை வாங்கினாள் மனைவி. மச்சான் என்னை ஒரு மாதிரியாய் பார்த்துச் சிரித்தபடியே," என்னாச்சு?" என்றார். அலுக்காமல் அத்தனையையும் அண்ணனுக்கு விளக்கி வைத்தாள் அன்புத் தங்கை.

"நான் வேணா படுக்க வச்சு மிதிக்கட்டுமா... சரி ஆயிடும்" எத்தனை நாள் கடுப்போ.. ஆர்வமாய்க் கேட்டார் மச்சான். மிதிவாங்காமலே " அய்யோ " என்று அலறினேன். "அதெல்லாம் வேணாம்... மந்திரிக்கலாமா” என்று நான் அகிம்சை வழிக்கு அழைத்தேன். “எந்தக் காலத்துல இருக்கீங்க மாப்ஸ்... வாங்க ஆர்த்தோவைப் பார்க்கலாம்” என்றார் மச்சான்.

 “எப்டிண்ணா இவர மாடிலருந்து கீழ இறக்குறது... நகந்தாலே நாதஸ்வரம் வாசிக்கிறாரே?” என்று சிரித்தாள் மனைவி. அவளுக்கு அது ஜோக்காம். ஒவ்வொரு படியாய் ஐலேசா போட்டு ஒருவழியாக என்னை கீழே தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஆட்டோவில் அண்ணனும் தங்கையும் வசதியாய் உட்கார, நான் பங்கு ஆட்டோவில் வடிவேலுவைத் திணித்ததுபோல் பாதி உடல் வெளியே வைத்துக்கொண்டு பயணித்தேன்.  “டிராஃபிக் போலீஸ் பார்த்தா பிடிச்சுருவாங்க சார்" என்று ஆட்டோக்காரர் தன் பங்குக்கு ரெட் அலர்ட் கொடுத்தார்.

ஆஸ்பத்திரிக்குப் போனதும் டாக்டரிடம் மீண்டும் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் மனைவி. முழுசா கதை கேட்டு முடித்தவர், “அப்டியே இந்த பெட்ல ஏறிப்படுங்க” என்றார்.  “முடியல டாக்டர்” என்றேன்.  “உடனே இவர அட்மிட் பண்ணிருங்க. முதுகெலும்புல ஊசி போடணும். ஒரு வாரம் பெட் ரெஸ்ட் இருக்கணும்” என்று அடுக்கினார் டாக்டர். பிறகென்ன... அட்மிட் ஆனேன்.  “காலையில் ஆறு மணிக்கு ஆபரேஷன் தியேட்டர்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். காலையில் ஒரு நர்ஸ் வந்தார், பச்சை நிற கவுனுடன். பின் பக்கம் முடிச்சு போடும் வசதி. " சட்டையைக் கழட்டிட்டு இதைப் போட்டுக்குங்க" என்றார். அதைப் போட்டதும் பார்க்க பச்சைக் கோமாளி போலத் தெரிந்தேன். அவரே வந்து தியேட்டருக்கு அழைத்துப் போவார் என்று நினைத்தேன். ஆனால் படுபாவிகள்... ஒரு ஆண் நர்ஸை அனுப்பிவிட்டார்கள். அவருக்கு என்ன கடுப்போ தெரியவில்லை... முரட்டுத்தனமாய் என்னை இழுத்துப்போனார்.

உள்ளே போனதும், "குப்புறப் படுங்க” என்றார்கள்.  “படுக்கவே முடியல... இதுல எங்கிட்டு குப்புறப் படுக்குறதாம்?” என்றேன். கொஞ்சமும் யோசிக்காமல் சினிமா கதாநாயகன் போல் என்னை அலேக்காக தூக்கி கட்டிலில் தள்ளினார் அந்த  (ஆண்) நர்ஸ்! அப்படியே முதுகில் ஒரு ஊசியைக் குத்தி  படுக்கவைத்தார்கள். சற்று நேரம் கழித்து என்னைத் தட்டி எழுப்பிய டாக்டர், “சாரை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. ஒருவாரம் கம்ப்ளீட்டா பெட் ரெஸ்ட்ல இருக்கணும்” என்றார்.

"டாக்டர்... ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போறதெல்லாம்..?” என்றேன். ``அதுக்கு மட்டும் மெல்லமா எழுந்து போயிக்கோங்க. வெயிட் எதுவும் தூக்கிடாதீங்க” என்றார்.

" எனக்கு என்னாச்சு டாக்டர்" என்றேன். " எல் 4-க்கும் எல் 5-க்கும் நடுவுல ஜவ்வு பிச்சிக்கிச்சி. புரிஞ்சுதா" என்றார் டாக்டர். மறுபடி ஆட்டோ. ரிட்டர்ன்ல பரவால்ல... கொஞ்சமா உட்கார முடிந்தது.  சிரமப்பட்டு படியேறி மாடிக்கும் வந்தாச்சு. நம்மள பாத்ரூம் பக்கத்துலையே ஒரு கட்டிலைப் போட்டு படுக்க வெச்சிட்டாங்க.

"வரேன் மாப்ள... உடம்பப் பாத்துக்குங்க" என்று வந்தவேலை முடிந்துவிட்டதுபோல் வீட்டுக்குக் கிளம்பினார் மச்சான். அண்ணன் போனதும் அம்மு ஹாலுக்கு சீரியல் பார்க்கப் போய்விட்டாள். ஒரு வாரம் கட்டில் வாழ்க்கை முடிந்து வலி மறந்து இயல்புக்குத் திரும்பினேன்.

ஹப்பா... உடம்பு சொன்ன பேச்சு கேட்டா எத்தன சுகம்... சமையலறையில் குக்கர் உஸ்ஸென்றது. ஹாலில் காய் நறுக்கிக் கொண்டிருந்த அம்மு கத்தினாள். "ஏங்க... அந்த வெயிட்டை எடுத்துப் போடுங்க குக்கருக்கு."

எழப் போனவன் அப்படியே அமர்ந்தேன்.  “நான் மாட்டேன்"  என்றேன். " ஏன்..?" என்னை புதிர் போலப் பார்த்தாள் அம்மு. "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல...” என்றேன்.  “சோக்காக்கும்... மதியானத்துக்கு சோறு வேணும்ல...” என்றாள். மறுபேச்சு ஏது... வெயிட்டைத் தூக்கி குக்கர் தலையில் வைத்து அதன் பெருமூச்சை அடக்கினேன்!