தீதி vs மோடி- மாநில சுயாட்சியா..? மம்தாவின் சுயநலமா..?


dd-vs-modi

இரா.வினோத்

மேற்கு வங்கத்தில் கலகம் பிறந்திருக்கிறது. அங்கே மம்தா பானர்ஜி ஆடிய அரசியல் ஆட்டத்தின் அதிர்வுகள் அடங்க நீண்ட காலம் ஆகும் போலிருக்கிறது!

`இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நடக்கும் நேரடி மோதல்' எனக் கடந்த ஒரு வாரமாக தேசிய ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால், ``இது பிரதமர் மோடிக்கும், பிரதமர் கனவில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கும் நடந்த நேரடி மோதல். பிரதமர் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, மாயாவதியை முந்த, `நான்தான் மோடியை நேருக்கு நேர் எதிர்க்கிறேன்' என்பதைக் காட்ட, மம்தா ஆடிய மாஸ் ஆட்டம்!'’ என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதிலும் தொடக்கம் முதலே மம்தா பானர்ஜி குறியாக இருக்கிறார். இதனாலேயே கடந்த மே மாதம் பெங்களூருவில் குமாரசாமி பதவியேற்றபோது சோனியா நெருங்கியபோது கூட, மம்தா விலகிப் போனார். இதையடுத்து ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் என 20-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களை மேடையேற்றி தன் பலத்தைக் காட்டினார். ஏற்கெனவே உபியில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணியால் நெருக்கடிக்கு ஆளான‌ பாஜக மேலிடம், மம்தாவின் இந்த வேகத்தால் கொந்தளித்தது. அவரது வேகத்தைத் தடுக்க சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கையும் கையிலெடுத்திருக்கிறது பாஜக.

மடியில் கனமா மம்தா?

கடந்த 2006-ல் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக அஸ்ஸாம், ஒடிஸா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கானோரிடம் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பணம் வசூலித்தது. இதை வைத்து அடுத்த 3 ஆண்டுகளில் சுற்றுலா, வாகனத் தயாரிப்பு, ஹோட்டல், பத்திரிகை, திரைப்படத்துறை எனப் பல்வேறு துறைகளில் 200 நிறுவனங்களைத் தொடங்கியது. இந்நிறுவனத்தின் அசூர வளர்ச்சியை அமலாக்கத்துறை கண்காணித்தபோது, நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதும், அதில் பல அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அடுத்த சில மாதங்களிலே திடீரென இந்நிறுவனம் மூடப்பட்ட நிலையில் மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்தது. பணத்தை பறி கொடுத்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.

சுனாமியாகச் சுழன்ற சாரதா வழக்கை உச்ச நீதிமன்றம் 2014-ல் சிபிஐ-க்கு மாற்றியது. அப்போது, சாரதா நிறுவனத்தின் தலைவர் சுதீப்தா சென்னுக்கும் திரிணமூல் காங்கிரஸூக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் மம்தாவின் ஓவியத்தை ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுத்தது, அவரது கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ், சதாப்தி ராய், முகுல் ராய் ஆகியோருக்கு நிதி அளித்தது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்ததால் அக்கட்சி நிர்வாகிகள் விசாரணைக்கு ஆளாகினர். இதனிடையே, மற்றொரு நிதி நிறுவனமான‌ ரோஸ்வேலி-யும் மோசடியில் சிக்கியது. இந்த இரு நிறுவனங்களை விசாரிக்க கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் வழக்குத் தொடர்பான மின்னணு ஆதாரங்களை அழித்ததாக சிபிஐ சந்தேகித்தது. எனவே, அவரை விசாரிக்க இருந்தபோது ராஜீவ் குமார், ‘பிப்ரவரி 12-ம் தேதி வரை தன்னிடம் சிபிஐ விசாரிக்கக்கூடாது’ என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினார்.

ஆனால் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4-ம் தேதிராஜீவ் குமாரை விசாரிக்க அவரது வீட்டுக்குப் போனார்கள். “என்னை 12-ம் தேதி வரை விசாரிக்கமுடியாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் விசாரணைக்கு வர முடியாது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தீர்கள்? சிபிஐ-க்கு புதிய‌ தலைவர் நியமிக்கப்பட்ட சில மணி நேரத்தில் உங்களுக்கு யார் உத்தரவிட்டது'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்ராஜீவ் குமார். இந்தத் தகவல் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பறக்க, அடுத்த சில நிமிடங்களில், ‘சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் சிறைப்பிடித்தது’ தலைப்புச் செய்தியானது.

மாநில சுயாட்சி போராட்டமா?

மோடியை நேருக்கு நேர் எதிர்க்க, தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த மம்தாவுக்கு, சிபிஐ வசமாக வந்து சிக்கியது. ``இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்போம். ஜனநாயகத்தைப் பாதுகாப்போம். கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம். மாநில சுயாட்சியை மீட்போம்'' என முழங்கிய அவர், கொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷன் முன்பாக தர்ணா

வில் அமர்ந்தார். பிரதமருக்கு எதிராக நள்ளிரவில் நடுங்கும் குளிரிலும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டது தேசத்தின் கவனத்தை ஈர்த்தது.

``நாட்டில் ஒரே கட்சி, ஒரே நபர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு சிபிஐ உள்ளிட்ட‌ அனைத்து ஏஜென்சிகளையும் தனது கைப்பாவையாக நடத்துகிறது. இந்த ஆட்சியில் அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் துளிகூட இடமில்லை. நான் சிபிஐ-க்கு எதிரான ஆள் இல்லை. ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு களவாடப்பட்ட வழக்கில் சிபிஐ வேகத்தைக் காட்ட வேண்டும். நான் ராஜீவ் குமாருக்காக மட்டும் போராட்டம் நடத்தவில்லை. மாநில சுயாட்சிக்காகவும், கூட்டாட்சி தத்துவத்தைக் காப்பதற்காகவும் போராட்டம் நடத்துகிறேன். யாரும் மோடிக்கு எதிராகப் பேசக்கூடாது என நினைக்கிறார்கள். நான் சாகவும் தயாராக இருப்பதால் எல்லாவற்றையும் பேசுகிறேன்'' என ஆவேசமாக முழங்கினார் மம்தா. அவரைச் சுற்றியிருந்த தலைமைச் செயலக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் `தீதி' (அக்கா) புகழ் பாடினர். அங்கேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அவசர கோப்புகளை வரவழைத்து உடனடியாக‌க் கையெழுத்திட்டார் மம்தா. இதையடுத்து, `மோடியைத் தனியாளாக எதிர்க்கும் வங்காளியான மம்தா துர்கா வடிவில் காட்சியளிக்கிறார்' போன்ற ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது. அனைத்தையும் ஒற்றை விரலைக் காட்டி சமாளித்த மம்தா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் 3 நாட்களில் தர்ணாவை வெற்றிகரமாக முடித்தார்.

டபுள் கேம் ஆடும் கட்சிகள்

மம்தாவுக்கு பாஜக, இடதுசாரிகளைத் தவிர நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ராகுல் காந்தி, மாயாவதி, தேவகவுடா, ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலரும் அறிக்கை வாயிலாக ஆதரவு மழை பொழிந்தனர். பாஜகவின் பழைய நண்பனான சிவசேனா தனது ‘சாம்னா' நாளிதழில் மம்தாவைப் பாராட்டி தலையங்கமே எழுதியது. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, திமுக சார்பில் கனிமொழி, ஆர்ஜேடி சார்பில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் நேரில் சென்று மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு பக்கம், ``ராகுல் தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்'' என முழங்கும் சந்திரபாபு நாயுடு, கனிமொழி, குமாரசாமி ஆகியோர், இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜியை வரிந்துகட்டிக் கொண்டு ஆதரிப்பதும் யோசிக்க வைக்கிறது.

இதனிடையே, ``2 ஆண்டுகளுக்கு முன்பு சாரதா வ‌ழக்கில் `மம்தா ராஜ்ஜியமா? மாஃபியா ராஜ்ஜியமா?' என மம்தாவை சராமாரியாக விமர்சித்த ராகுலுக்கு இப்போது என்ன ஆகிவிட்டது. விரைவில் குணமடைய வாழ்த்துகள்'' எனப் பழைய பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கலாய்த்தது பாஜக. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுடன் நேருக்கு நேர் மோதிவரும் காங்கிரஸாரும் ராகுலின் செயலால் தலையில் அடித்துக்கொள்கின்றனர். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த 2 மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ``ராஜீவ் குமாரை கைது செய்யக்கூடாது. அவர் மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மின்னணு ஆதாரத்தை சேதப்படுத்தியாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு 20-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்'' எனத் தீர்ப்பளித்தது. இதை மம்தாவுடன் சேர்ந்து பாஜகவும் வரவேற்றிருப்பது, விசித்திரமாகப் பார்க்கப்படுகிறது.

பாஜகவின் அடுத்த‌ திட்டமும், மம்தாவின் பதிலடியும்

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “சிபிஐ அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தியது தவறு. இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு இந்தச் சம்பவம் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைந்திருப்பதையே இது காட்டுகிறது. அரசியலமைப்பின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. எனவே, ஆளுநரிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம்'' என நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்கப்பார்க்கிறார்களா என்ற புதிய சந்தேகம் பரவி வருகிறது. ஆனாலும் அசராத மம்தா, மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்துக்குச் செல்ல இருந்த பாஜக தலைவர் அமித் ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி மறுத்துள்ளார். தேர்தலையொட்டி 200 இடங்களில் பேசத் திட்டமிட்டிருக்கும் அமித் ஷா, மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேர்தல் நெருங்க, நெருங்க ‘தீதி vs மோடி' மோதல் இன்னும் அனல் பறக்கும் போலிருக்கிறது!