வலை வீசிய பாஜக... தலை தப்பிய மோகன்லால்..!


mohanlal-bjp

என்.சுவாமிநாதன்

நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் கேரளத்திலும் ஜிவ்வென்று ஏறுகிறது. இதன் ஒரு பகுதியாக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை தலைநகர் திருவனந்தபுரத்தில் களம் இறக்க கேரள பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அண்மையில் மத்திய அரசு மோகன்லாலுக்கு அறிவித்த பத்மபூஷண் விருதும் இதற்கு தூபம்போட, அஜித் ஸ்டைலில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மோகன்லால்.

கேரள தேர்தல் களத்தில் எப்போதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என இருமுனைப் போட்டியே நிலவும். கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் ஓ.ராஜகோபால் பெற்ற வெற்றியின் மூலம் கேரள சட்டமன்றத்தில் தனது கணக்கைத் துவங்கியது பாஜக. இந்நிலையில், சபரிமலை விவகாரம் தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி இருப்பதாக நம்பும் பாஜக, அதை வைத்து கேரளத்தில் வலுவாக கால் ஊன்ற நினைக்கிறது.

கேரளத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ-வை வைத்திருந்தாலும் மாநிலங்களவையில் அக்கட்சிக்கு கேரளத்திலிருந்து சென்ற 4 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் நடிகர் சுரேஷ் கோபியும் அடக்கம். முதலில் அவர் மூலமாக மோகன்லாலை வளைக்கவும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவர் பிடி கொடுக்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டு, அமைச்சரும் ஆக்கப்பட்ட அல்போன்ஸ் கண்ணன்தானம் உள்ளிட்ட நான்கு எம்பிக்கள் இருந்தாலும், மோகன்லால் போன்ற மாஸ் ஹீரோ இணைந்தால் கேரளத்தில் கட்சியைத் தூக்கி நிறுத்தலாம் என்பது பாஜகவின் கணிப்பு.

இதுதொடர்பாக ஆரம்பத்தில் ரகசியமாகவே காய் நகர்த்தி வந்த பாஜகவினர், ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் “மோகன்லால் தாரளமாக வரலாம்… வந்தால் வரவேற்போம்” எனப் பேசத் துவங்கினார்கள். அதன் உச்சமாக, கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் எம்எல்ஏ-வுமான ஓ.ராஜகோபால், “மோகன்லாலை பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முயன்று வருகிறோம். அவரிடம் நேரிலும் பேசி வருகிறோம்” என்று அண்மையில் கொளுத்திப் போட்டார். இந்தச் செய்தி கேரளம் முழுக்க வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து மோகன்லாலுக்கு பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த நகர்வுகள் அனைத்துமே மோகன்லாலை மெல்ல பாஜக வலையில் வீழ்த்திவிடுமோ என அஞ்சிய அவரது ரசிகர்கள், “நடித்தால் மட்டும் போதும். அரசியல் வேண்டாம்’’ என சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கேரள மாநில மோகன்லால் ரசிகர் மன்றம் மற்றும் கலாச்சார நல மையத்தின் தலைவர் விமல்குமார் உள்ளிட்டவர்கள் மோகன்லாலை திரையில் மட்டுமே பார்க்க விரும்புவதாக பொதுவெளியில் குரல் கொடுத்தனர்.

மோகன்லாலை பாஜக நெருங்கி வருவதற்கு ஒருவகையில் அவரது அணுகுமுறையும் காரணம் தான். முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் மோகன்லால், கடந்த செப்டம்பரில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்ட மோகன்லால், “பிரதமர் மோடிஜியை மிகவும் புனிதமான ஜென்மாஸ்டமி அன்று சந்தித்தது மகிழ்ச்சி. இந்தச் சந்திப்பின்போது விஸ்வசாந்தி அமைப்பு குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் பிரதமருக்கு விளக்கினேன்”எனக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல், “மோகன்லால்ஜியை நேற்று சந்தித்தேன்.அவரின் தன்னடக்கம் என்னை சிலிர்க்க வைத்தது. சமூகத்துக்காக அவர் செய்யும் சேவை பாராட்டுக்குரியது’’என மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஏற்கெனவே கடந்த 2017-ல், ‘தூய்மையே சேவை’ என்ற பிரதமர் மோடியின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மோகன்லாலை இணைந்துகொள்ளக்கூறி மோடியே அழைப்பு விடுத்திருந்தார். இதெல்லாம்தான் மோகன்லால் தங்கள் பக்கம் வருவார் என்ற நம்பிக்கையை பாஜகவினருக்குக் கொடுத்தது. பாஜகவினர் தன்னை அரசியலுக்குள் இழுப்பதற்காக பேசியவற்றை எல்லாம் மோகன்லால் இதுவரை கண்டும் காணாமல்தான் இருந்தார். ஆனால், தமிழகத்தில் தனக்கும் தனது ரசிகர்களுக்கும் காவிச் சாயம் பூசுவதற்கு பாஜக எடுத்துவைத்த மூவ்களுக்கு ஒரே ஒரு அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் அஜித். அந்த அறிக்கை மோகன்லாலையும் யோசிக்க வைத்துவிட்டது என்கிறார்கள் அவரது நெருங்கிய நட்பு வட்டத்தினர்.

இந்நிலையில், இதுதொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள மோகன்லால், “நான் ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாக நிறைய வதந்திகள் வருகின்றன. என்னுடைய வேலைகளில் இருந்து என்னால் விலகி நிற்க முடியாது. அதனால் தேர்தலில் போட்டியிடும் எண்ணமெல்லாம் இல்லை. எனக்கான களமும் அரசியல் இல்லை. அரசியல் எல்லாம் கடினம். எனக்கு அரசியல் வராது. நான் நடிப்பதையே விரும்புகிறேன். அதில் எனக்கு ஏராளமான கமிட்மென்ட்களும் இருக்கின்றன” எனத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

தாங்கள் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த மோகன்லால் இப்படி ஒரேயடியாய் கைவிரித்த நிலையில், கேரளத்தில் எப்படி கணக்கைத் துவங்குவது எனக் கையைப் பிசைகிறது கேரள பாஜக! தங்களது ஆஸ்தான ஹீரோ அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் மோகன்லாலின் ரசிகர்கள்.

கேரளம் எப்போதும் ஆச்சரியம்தான்!