தோற்றத்தை வச்சு  மோசமா கமென்ட் அடிச்சாங்க! - பொறிந்து தள்ளும் கீர்த்தி பாண்டியன்


cinema-actress-keerthi-pandiyan-interview

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

மெருகேற்றப்பட்ட தேக்கு மரத் தூண்போல் துலக்கமான அழகுடன் கிறங்கடிக்கிறார் கீர்த்தி பாண்டியன். ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் அருண் பாண்டியனின் மகள். தந்தையின் பாணியில் ‘தும்பா’ எனும் அட்வெஞ்சர் படத்தின் மூலம் அறிமுகமாகும் கீர்த்தி பாண்டியனை காமதேனு இதழுக்காக பெசன்ட் நகரில் சந்தித்தேன்.

உங்க அப்பாவே பெரிய புரொடியூசர். அப்புறம் ஏன் ஸ்ட்ரெய்ட்டா சினிமாவுக்கு வராம குறும்படங்கள், மேடை நாடகங்கள்னு இருந்தீங்க?

காலேஜ் முடிச்சதும் அப்பா நடத்திக்கிட்டு இருந்த புரொடக் ஷன் கம்பெனியின் வெளிநாட்டு வியாபாரத்தைக் கவனிச்சிக்கிட்டேன். நடிக்கணும்கிற ஆசை மட்டும் மனசுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு. ஆனா, அப்பா இத்தனை நாள் போராடி சேர்த்துவச்ச புகழைப் பயன்படுத்தி ஃபீல்டுக்கு வரக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன். என்னோட சில ஃப்ரெண்ட்ஸ் மேடை நாடகங்கள்ல நடிச்சிட்டிருக்காங்க. நானும் அதுல நடிக்கப் போறேன்னு அப்பாகிட்ட சொன்னேன். “அப்படியா! சரி, எங்க போனாலும் கவனமா இருந்துக்கோ”ன்னு சொன்னார். என் ஆசைகளுக்கு மறுப்பு சொல்லாம இருந்ததுதான் அவர் எனக்குப் பண்ணின உதவி.

‘தும்பா’ படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்துச்சு?

ரொம்ப லவ்லி. புலியைப் படம் எடுக்கணும்கிற ஆசையோட காட்டுக்குள்ள பயணிக்கிற வைல்ட் லைஃப் போட்டோகிராபரா நடிச்சிருக்கேன். எனக்குக் காடுகள், வனவிலங்குகள்னா ரொம்ப இஷ்டம். ஷூட்டிங்குக்காகக் கிட்டத்தட்ட ஒரு மாசம் கேரளாவில் உள்ள காடுகளுக்கு உள்ளேயே தங்கியிருந்தோம். அஞ்சு மணிக்கு எந்திரிச்சு ஷூட்டிங்குக்குக் கிளம்புனா, நைட் ரூமுக்கு வர்றதுக்குப் பத்து மணி ஆகிடும். சினிமா பத்தி நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான நாட்கள் ‘தும்பா’ ஷூட்டிங் நாட்கள்தான்.

பொதுவா, மேடை நாடகங்கள்ல இருக்கிற நடிப்பு சுதந்திரம் சினிமாவுல இருக்காதுன்னு ஒரு கருத்து இருக்கே?

உண்மைதான். மேடை நாடகங்கள்ல சுதந்திரமா ஆடிப்பாடி நடிப்பை வெளிப்படுத்தலாம். சினிமாவுல நடிக்கும்போது ஃப்ரேமுக்கு வெளிய தலை போயிடக் கூடாது, க்ளோசப் ஷாட்ல கண்ணை மூடக் கூடாதுன்னு பல கண்டிஷன்ஸ் இருக்கு. ஆனா, நாடகங்களால தொட முடியாத பல விஷயங்களை சினிமாவுல ஈசியா கொண்டுவர முடியும். என்னைப் பொறுத்தவரை ரெண்டு ஃபீல்டுமே ரெண்டு கண்கள் மாதிரி. சினிமாவுல நடிச்சாலும், மேடை நாடகங்கள்ல தொடர்ந்து நடிப்பேன்.

கோலிவுட்ல வெள்ளை நிற பப்ளி ஹீரோயின்ஸுக்குத்தான் மார்க்கெட்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கே... ஒல்லி திராவிட அழகியான நீங்க எப்படி சாதிப்பீங்க?

இது சீரியஸான பிரச்சினை. உடைச்சிப் பேசித்தான் ஆகணும். அப்பா பேரைச் சொல்லாம பல ஆடிஷன்களுக்குப் போயிருக்கேன். தோற்றத்தை வச்சு மோசமா கமென்ட் அடிக்கிறவங்களைப் பார்த்திருக்கேன். ஒரு முன்னணி டைரக்டர், நான் நடிச்சு காட்டுறதுக்கு முன்னாடியே, “உன்னையெல்லாம் யாரு பார்ப்பாங்க”ன்னு ரொம்பக் கேவலமா பேசிட்டார். அப்படியே நொறுங்கிட்டேன். அப்ப, அப்பாதான் கைகொடுத்தார். அவரும் இப்படி ஒல்லியா இருந்து பாடி பில்ட் பண்ணினவர்தான். நிறைய டிப்ஸ் கொடுத்தார், ஜிம்முக்குப் போனேன். நிறைய சாப்பிட்டுப் பார்த்துட்டேன். எதுவும் செட் ஆகலை. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல என்னோட சுயத்தில இருந்து விலகுறதுல அர்த்தமே இல்லைன்னு புரிஞ்சது. உருவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காம நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற கதைகளைத் தேடினேன். அப்படி அமைஞ்சதுதான் ‘தும்பா’.

டைரக்டர் ஹரிஷ் ராம் என் மீது வச்ச நம்பிக்கை ரொம்ப பெரிய விஷயம். இங்கே ஹீரோயின்னா வெள்ளையா இருக்கணும், சதைப்பிடிப்போட இருக்கணும்னு நினைக்கிற மனநிலை ரொம்ப மோசமானது. உருவத்துல சாதாரணமா இருக்கிற ஹீரோஸ்தான் இன்னைக்கு கோலிவுட்ல பட்டையக் கிளப்பிட்டு இருக்காங்க. அதுக்குக் காரணம் அவங்க நடிப்புத் திறமை. அதேமாதிரி ஹீரோயின்ஸ் நடிப்புக்கும் முக்கியத்துவம் தரப்படணும்.

நடிப்பு தவிர வேற என்னவெல்லாம் பிடிக்கும்?

பாலே, சால்சா டான்ஸ்ல சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் முடிச்சிருக்கேன். ப்ரானிக் ஹீலிங் தெரியும். ஸ்கூல்ல தமிழ் பாடத்துல ரொம்ப வீக் ஸ்டூடண்ட் நான். நடிக்க ஆரம்பிச்ச அப்புறம் தமிழ் மேல தனி ஈர்ப்பு வந்துருக்கு. ‘பொன்னியின் செல்வன்’ வரைக்கும் வந்துட்டேன். சமீபத்தில் என் ஃப்ரெண்ட் சொல்லி, பாரதியார் கவிதைகள் படிச்சிட்டு இருக்கேன். அப்ப்ப்பா! என்ன ஒரு ஃபயர் அவர் எழுத்துல. என் மேல் மத்தவங்க வச்ச விமர்சனங்கள், என் தாழ்வு மனப்பான்மை எல்லாத்தையும் உடைச்செறிஞ்சு, வாழ்க்கையை எதிர்த்துப் போராட வச்சது அவரோட ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ கவிதை.

உருவத்தை வச்சு யாரையும் எடை போடக்கூடாதுன்னு அன்னைக்கே பாரதியார் சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா, இங்க இன்னும் சில பேருக்கு அது புரியல!

அட்டை மற்றும் படங்கள்: பு.க.பிரவீன்