சட்டம் இயற்றும் அவையிலும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும்! - மாநிலங்களவைக்குச் செல்லும் வழக்கறிஞர் வில்சன் பேட்டி


wilson

கே.கே.மகேஷ்

திமுகவின் அரசியல் பயணத்தில் நீதிமன்றம் மூலம் களமாடியவர்களில் முக்கியமானவர் வழக்கறிஞர் வில்சன். திமுக கொடியைக் காப்பாற்றிய சட்ட நடவடிக்கை தொடங்கி, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடைக்க நீதிமன்றத்தில் வாதாடியது வரை திமுகவின் முக்கியத் தருணங்களில் தோள்கொடுத்தவர். இப்போது அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குச் செல்கிறார். டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தவரிடம் அலைபேசியில் ஒரு பேட்டி:

 உங்களது குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்...

 பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா எஸ்.புஷ்பநாதன் திமுக அபிமானி. டிராவல்ஸ் நடத்திவந்தார். லயோலா கல்லூரியில் படித்தபோது திமுக மாணவர்களோடு இணைந்து செயலாற்றினேன். அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அடிக்கடி மாணவர் போராட்டங்கள் நடக்கும். கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவராக அப்போது கலாநிதி மாறன் இருந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்த பிறகும், போராட்டங்களில் பங்கேற்றேன். என் மனைவி வான்மதி இந்தியன் வங்கியில் பணியாற்றியவர், விருப்ப ஓய்வுபெற்று குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகன் ரிச்சர்ட்சன் வில்சன் வழக்கறிஞராக இருக்கிறார்.

 கட்சியும் கொடியும் எங்களுக்கே சொந்தம் என்று வைகோ உரிமை கோரிய காலகட்டத்தில், நீங்கள்தானே திமுக வழக்கறிஞர்? எப்படி வந்தது அந்த வாய்ப்பு?

 1989-ல் வழக்கறிஞராகப் பதிவுசெய்துவிட்டு பிரபல திமுக வழக்கறிஞரான கே.வி.வெங்கடபதியிடம் ஜூனியராகச் சேர்ந்தேன். 1994-ல் நடந்த அந்த வழக்கில் கே.வி.வெங்கடபதி, சீனியர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் போன்றோருடன் நானும் திமுக சார்பில் ஆஜரானேன்.

 அந்த வழக்கின்போது கருணாநிதியுடனான அனுபவங்களைச் சொல்லுங்களேன்...

 அறிவாலயத்தில் எங்களோடு கலந்துரையாடுவார் கலைஞர். திமுக சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழி ஆவணங்கள், பதில் மனுக்களைப் பொறுமையாகப் படித்துப் பார்ப்பார். “கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்” என்று அறிவுரை சொல்வார். நீதித் துறை மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சட்டரீதியாகப் போராடுவோம் என்பார்.

 டான்ஸி வழக்கையும் நடத்தியிருக்கிறீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்…

 டான்ஸி வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உதவியாக நியமிக்கப்பட்டேன். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை நெருங்கியபோது, ஆட்சி மாறிவிட்டது. அதன் பிறகு, அரசுத் தரப்பில் சுத்தமாக ஒத்துழைப்பு இல்லை. கேஸ் கட்டைக்கூட தராமல் இழுத்தடித்தார்கள். உச்ச நீதிமன்றத்தை நாடினேன். அப்போது அட்டர்னி ஜெனரலாக சோலி சொராப்ஜி இருந்தார். அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்துவதற்குத் தடை வாங்கினோம். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வழக்கு நடந்தது. வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜெயலலிதா முதல்வராக நீடிக்கக் கூடாது என்று நாங்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது மூத்த வழக்கறிஞர்களுக்கு உதவியாகப் பணியாற்றினேன். அந்த வழக்கின் தீர்ப்பால்தான் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

 கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, மறுநாள் சிறைவாயிலில் தர்ணா போராட்டம் நடத்தியபோது நீங்கள் உடனிருந்த புகைப்படம் இப்போது வைரலாகியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை நினைவுகூரலாமா?

 மறக்க முடியுமா அந்த நாளை? 2001 ஜூன் 30 - வஞ்சம் வைத்து நள்ளிரவில் வீடு புகுந்து கலைஞரைக் கைது செய்தது ஜெயலலிதா ஏவிவிட்ட போலீஸ் படை. குறைந்தது இரண்டு நாட்களாவது அவரை உள்ளே வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி கைது செய்தார்கள். இன்னொரு பக்கம் தளபதி ஸ்டாலினையும் கைது செய்துவிட்டார்கள். தகவல் கிடைத்ததும் தலைவரைக் காண விரைந்து போனேன். ஆனால், அங்கே இங்கே என்று அலைக்கழித்தார்கள். மவுன்ட் ரோடில் உள்ள ஒரு கட்டிடத்தில் விசாரணைக்காக அவரை வைத்திருப்பதாக அறிந்து அங்கே போனேன். அவரைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை போலீஸ். வழக்கறிஞரைச் சந்திப்பது அவரது சட்ட உரிமை என்று சொன்னேன். ஆனாலும், அடித்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள் காவலர்கள். அடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாஜிஸ்திரேட் அசோக்குமார் வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்வதை அறிந்து, அங்கேயே போய்விட்டேன். கையிலும் காலிலும் சிராய்ப்பு, ரத்தக்கட்டு காயங்களைக் காட்டியதும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அவரை சிறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றார் நீதிபதி. விசாரணை அதிகாரியின் காரில் நான் முன்சீட்டில் இருக்க, பின்னால் தலைவரும், சகோதரி கனிமொழியும் இருந்தார்கள். கார் நேரடியாகச் சென்னை மத்திய சிறையை நோக்கிப் போனது. மருத்துவரிடம் அழைத்துப்போகாமல் ஏன் சிறைக்குக் கொண்டு வந்தீர்கள் என்று வாக்குவாதம் செய்தேன். போலீஸார் அசைந்து கொடுக்கவில்லை. உடனே, சிறை வாசலிலேயே தலைவர் தர்ணா போராட்டம் நடத்தினார். அங்கிருந்து அவரை வேலூருக்குக் கொண்டுபோகவும் திட்டம் போட்டார்கள். எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினோம். எங்களைவிட கலைஞர்தான் மன உறுதியுடன் எல்லாவற்றையும் எதிர்கொண்டார்.

 உங்களை ‘வின்’சன் என்று கருணாநிதி அழைத்தாராமே?

 ஆமாம். கலைஞர் பார்த்துப் பார்த்து கட்டிய புதிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெயலலிதா அரசு மூடப் பார்த்தது. அதுதொடர்பான வழக்கில் தடை உத்தரவு பெற்றபோதுதான், தலைவர் என்னைப் பார்த்து, “வாயா 'வின்'சன்” என்று அன்போடு அழைத்தார்.

 கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கு உங்களுக்குப் பெயர் பெற்றுத் தந்தது. நீங்கள் மாநிலங்களவைக்குச் செல்ல இந்த வழக்கில் பெற்ற வெற்றியும் முக்கியக் காரணம் என்கிறார்களே?

 கலைஞர் காலமானபோது காவேரி மருத்துவ மனையில்தான் இருந்தேன். தந்தையை இழந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்த கட்டமாகத் தலைவரை அவர் விரும்பியபடி மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. அதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முறையிட்டார். கண்டிப்பாகப் பரிசீலிப்பதாக கூறிய முதல்வர், கடைசியில் மெரினாவில் இடம் ஒதுக்காமல் அடையாறில் 2 ஏக்கர் தருவதாகத் தலைமைச் செயலரைக் கொண்டு அறிக்கை வெளியிட வைத்தார். அந்த நேரத்தில் எவ்வளவு ஆளுமை மிக்கத் தலைவராக இருந்தாலும் நிலைகுலைந்து போய்விடுவார்கள். திமுக தொண்டர்கள் எல்லாம் பெரும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்கள். இந்தச் சூழலில் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதா, சட்டப் போராட்டம் நடத்துவதா என்ற கேள்வி ஸ்டாலின் முன்பு இருந்தது. “சட்டப் போராட்டம் நடத்துவோம்" என்று நான் சொன்னபோது,  “ஆம், அதுதான் சரி, அப்படியே செய்வோம்" என்று துணிந்து முடிவெடுத்தார் அவர். அந்த நேரத்தில் அப்படியொரு முடிவெடுப்பது சாதாரண விஷயமல்ல. அவர் வேண்டாம் என்று சொல்லியிருந்தால் எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. தான் எடுத்த முடிவின் மூலம் திமுகவின் கவுரவத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றிவிட்டார் ஸ்டாலின்.  தீர்ப்பு சாதகமாக கிடைத்த பிறகு கதறி அழுதாரே, அதுவரையில் அத்தனை உணர்ச்சிகளையும் எப்படி அடக்கி வைத்திருந்தார் என்று உண்மையி

லேயே ஆச்சரியப்பட்டுப் போனேன். இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் அவர் பின்னால் அணிவகுத்துச் சென்றார்கள். திமுக தகுதிமிக்க, ஆற்றல் மிக்க ஒருவரின் கைக்குத்தான் வந்திருக்கிறது. கட்சிக்கு மட்டுமல்ல; தமிழகத்திற்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அன்றே உணர்ந்தேன்.

முதன் முறையாக மாநிலங்களவைக்குச் செல்கிறீர்கள். உங்களுடைய ரோல் மாடலாக யாரைக் கருதுகிறீர்கள்?

 தளபதி ஸ்டாலினைத்தான் என் வழிகாட்டியாகக் கருதுகிறேன். அண்ணா காட்டிய வழியில் கலைஞரும், கலைஞர் நடந்த பாதையில் ஸ்டாலினும் நடக்கிறார்கள். ஒரு எதிர்க்கட்சி எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதற்கும்,  ஒரு உறுப்பினர் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதற்கும் அவருடைய சட்டமன்றப் பணிகள்தான் எனக்கு முன்னுதாரணம். திமுக குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திமுகவுக்காகப் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வாதாடியிருந்தாலும், பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருந்தாலும் எனக்கு ஒரு பதவி கொடுத்து கட்சிக்குள் கொண்டுவந்தவர் ஸ்டாலின்தான். கலைஞர் இருந்தபோதே, என்னைக் கட்சியின் சட்டத் திருத்தக் குழுச் செயலாளராக்கியவர் அவர்தான்.

மக்களவையில் அதீதப் பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜக, மாநிலங்களவையிலும் தன்னுடைய பலத்தை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. இப்படியான சூழலில் உங்கள் பணி எப்படி இருக்கும்?

 ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்கிறது பாஜக. அதற்கு எதிராக எப்படிப் பணியாற்றினால் வெற்றிபெற முடியும் என்பதை மக்களவைத் தேர்தலிலேயே சாதித்துக் காட்டியிருக்கிறார் தளபதி. மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானதும், தலைவரின் அறிவுரைப்படியும், மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படியும் செயலாற்றுவேன். நிச்சயமாகத் தமிழக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன். நீதிமன்றத்தில் ஒலித்த என் குரல் சட்டத்தை இயற்றுகின்ற அவையிலும் இனி ஓங்கி ஒலிக்கும்!