என்று தணியும் நம் கோலியின் காட்டம்? - மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறாரா?


இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி காட்டமாக பதில் சொன்னது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் என இரண்டையும் அடுத்தடுத்து இழந்துள்ளது. ஓவலில் நடந்த தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை விராட் கோலி சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு காட்டாமாக பதிலளித்தார் கோலி.

பத்திரிகையாளர்: விராட், உங்கள் அணி தொடர் முழுவதும் போட்டி போட்டு விளையாடியது. ஆனால் கடந்த 15 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி என்று சொல்வதெல்லாம் உங்கள் மீது கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதா? நீங்கள் அந்த பட்டத்தை நம்புகிறீர்களா?

கோலி: நாங்கள் சிறந்த அணி என்பதை நம்பவேண்டும். அதிலென்ன இருக்கிறது?

பத்திரிகையாளர்: ஆனால் கடந்த 15 வருடங்களில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி இதுவா?

கோலி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிகையாளர்: என்னால் உறுதியாக அப்படி சொல்ல முடியாது

கோலி: உங்களால் சொல்ல முடியாது என்றால் அது உங்கள் கருத்து. நன்றி. 

இப்படி சட்டென முகத்தில் அடிப்பது போல பதிலை சொல்லி முடித்த கோலி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு அடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற போதும், பத்திரிகையாளர் சந்திப்பில் கோலி காட்டமாகவே நடந்து கொண்டார்.

தற்போது மீண்டும் கோலியின் இந்த காட்டமான பதில் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கோலியின் ஆணவத்தையே இது காட்டுகிறது, அவர் திருந்தவே மாட்டார் என்கின்ற ரீதியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரே வேதனையுடன் இந்த காணொலிப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்