60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும்


"இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார். 

நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு.

கனவு நனவானது:

'மலைக்கள்ளன்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'மதுரை வீரன்', 'தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் 'நாடோடி மன்னன்' படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.!

இந்தப் படம்தான் அவர் தயாரித்து இயக்கிய முதல் படம். நடிகர் எம்ஜிஆரை தயாரிப்பாளர் எம்.ஜி.ஆர்., இயக்குநர் எம்.ஜி.ஆர்., என அடையாளப்படுத்திய படம்.

'இஃப் ஐ வேர் ஏ கிங்' என்ற பிரான்க் லாய்ட் எழுதி இயக்கிய வரலாற்று நாடகத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அதுபோல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அவரது திட்டம் என்று சொல்வதைவிட கனவு என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் அந்தக் கனவு நனவானது. நாடோடி மன்னன் படப்பிடிப்பும் தொடங்கியது. 

எம். ஜி. ராமச்சந்திரன், பானுமதி, பி. எஸ். வீரப்பா, எம். என். ராஜம், சரோஜா தேவி, எம். என். நம்பியார், சந்திரபாபு, சகுந்தலா, முத்துலட்சுமி, எம். ஜி. சக்கரபாணி, ஈ.ஆர்.சகாதேவன், கே.ஆர்.ராம்சிங், கே.எஸ்.அங்கமுத்து என்று பெரிய நடிப்புப் பட்டாளமே படத்தில் உண்டு.

பெரும் பொருட் செலவு:

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். 20,000 அடி ரீல் செலவானது என்று சொல்லக் கேட்டதுண்டு. நடிகர்களுக்கு சம்பளமும் உச்சம்தான். பெரிய முகங்கள் மட்டுமல்ல சாதாரணப் பணியில் இருந்த ஊழியருக்கும்கூட தினமும் சூட்டிங்கின்போது விருந்து சாப்பாடுதான். தளத்தில் பாரபட்சமே இருந்ததில்லையாம்.

இப்படிப் பொருட்செலவு செய்யப்பட்டது திரைத்துறையில் பல பேச்சுக்களை உண்டாக்கியது.
அப்போதுதான் எம்ஜிஆர், "இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி. நாடோடி மன்னன் ஒரு பரிசோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்.

'கேவா' கலர் திரைப்படம்!
கறுப்பு வெள்ளையாகத்தான் நாடோடி மன்னன் எடுக்கப்பட்டது. ஆனால், படம் பாதி சென்றபோது நடிகை பானுமதியுடன் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே சொன்னதுபோல் படம் மொத்தம் 20,000 அடிகளைக் கடந்தது. பல காட்சிகள் நேர்த்திக்காக திரும்பத்திரும்ப எடுக்கப்பட்டதால் கூடுதலாக ஃபிலிம் செலவானது.
படப்பிடிப்பின்போது ஒருமுறை நடிகை பானுமதி, "எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?" என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., "படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க" எனக் கூற படத்தில் இருந்து பானுமதி விலகிக்கொண்டார். பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

சரோஜா தேவி வரும் காட்சிகளில் இருந்து கடைசி 7 ரீல் கேவா கலர் பயன்படுத்தி கலர் படமாக எடுக்கப்பட்டது. அலிபாபாவும் 40 திருடர்களும்தான் தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் (Gevacolor) திரைப்படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரோஜா தேவிக்கு திருப்புமுனை!
பானுமதி விலகியதால் சரோஜா தேவி வர, படத்தில் அவர் என்ட்ரிக்கு மானைத் தேடி மச்சான் வர்றான் பாடலும் வைக்கப்பட்டது. கலர்ஃபுல்லான அந்தப் பாடல் அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. எம்ஜிஆர் அன்று அந்த வாய்ப்பைத் தராவிட்டால் நாடோடி மன்னனில் ரத்னாவாக சரோஜா தேவி மிளிராவிட்டால் அவருக்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் பாதை திறந்திருக்காது என்றே சொல்லலாம். சரோஜாதேவிக்கு திருப்புமுனை படம் அது.

சண்டையும் பாடலும்..
படத்தில் சண்டைக் காட்சிகளும் பாடல்களும் வெறும் ப்ளஸ் என்று முடித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு சண்டையைப் பற்றியும் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் கயிற்றுப் பாலத்தின் மீது பி.எஸ்.வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் போடும் சண்டைக் காட்சிக்கு தியேட்டர்களில் விசில் பறக்கும்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்திரை பதித்திருக்கும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் தூங்காதே தம்பி தூங்காதே இன்றளவும் ஒரு உத்வேக உபதேசப் பாடலாக நிலைத்து நிற்கிறது.

அதேபோல், 
பாடு பட்டா தன்னாலே 
பலனிருக்குது கை மேலே 
பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே..

பாடலில் பொதுவுடைமை கருத்துகளை முன்வைத்திருப்பார்.

மதுரையும் நாடோடி மன்னனும்!
மதுரைக்கும் நாடோடி மன்னனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மதுரையில், தங்கம் தியேட்டரில் நாடோடி மன்னன் வெளியானது. 100 நாட்களைக் கடந்து படம் வெற்றிகரமாக ஓடியது. எம்ஜிஆர் கூறியதுபோலவே படம் வெற்றிபெற்று அவரை மன்னனாக்கியது. வசூல் ரீதியாக இமாலய சாதனை புரிந்தது. 
மதுரையில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நாடோடி மன்னன் வெற்றி விழா நடந்தது. அப்போதைய மேயர், மதுரை முத்து, எம்.ஜி.ஆரை அலங்கார சாரட் வண்டியில் அமர வைத்து, மிக பெரிய ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் பரிசு அளித்தார். 

நாடோடி மன்னன் வெளியாகி சரியாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்ஜிஆர் முதல்வரானார்.

எம்ஜிஆரும் 22-ம் தேதியும்!
எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. 

1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது நாடோடி மன்னன். தயாரிப்பாளர், இயக்குநர் எம்.ஜி.ராமச்சந்திரனை உருவாக்கியது.

அதற்கு முன்னதாக 1954 ஜூலை 22-ல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது மலைக்கள்ளன். அந்தப் படம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதை. படத்துக்கு திரைக்கதை வசனம் கலைஞர் கருணாநிதி. இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு. 6 மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 6 மொழிகளிலுமே பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் மிகவும் பிரபலமானது. தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய இப்பாடலை டிஎம்எஸ் பாடியிருப்பார்.

பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி 
பாமர மக்களை வலையினில் மாட்டி.. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
என்ற டிஎம்எஸ்ஸின் குரலில் இப்பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஓங்கி ஒலித்தது.

1975 ஆகஸ்ட் 22-ல் வெளியானது இதயக்கனி. ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தான் இப்படத்தைத் தயாரித்தது. சத்யம் திரையரங்கு 1974-ல் திறக்கப்பட்டிருந்த நிலையில் 1975 ஆகஸ்ட் 22-ல் சென்னையில் சத்யம் திரையரங்கில் வெளியான இப்படம் 100 நாட்களைக் கடந்தது.

மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் வெளியாகி பொங்கல் வரை ஓடியது. ஆகஸ்ட் தொடங்கி அடுத்த ஜனவரி ஓடிய மிகப்பெரிய வெற்றிப்படம் இதயக்கனி. 

இந்தப் படத்தை ஏ.ஜெகன்நாதன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ராதா சலுஜா என்ற வடநாட்டுப் பெண் நடித்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..., நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற பாடல்கள் மெகா ஹிட்.

காவிரியின் பெருமையை பறைசாற்றும் பாடல்..

நீங்க நால்லா இருக்கோணும் பாடலில் பொங்கிவரும் காவிரி அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் தொகையறாவில் காவிரியின் புகழ் பறைசாற்றப்பட்டிருக்கும்.

 

தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
              கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில் கருவாகி
              தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
              ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க சிவ சமுத்திர
              நீர் வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய் 
பெண்  :    வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
              கண்ணம்பாடி அணை கடந்து ஆடு தாண்டும் காவிரிப் பேர் பெற்று 
              அகண்ட காவிரியாய்ப் பின் அடர்ந்து 
ஆண் : கல்லணையில் கொள்ளிடத்தில்
              காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
              தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
              தனிக் கருணைக் காவிரி போல்
பெண்  :    செல்லும்  இடமெல்லாம் சீர் பெருக்கிப் பேர் நிறுத்தி
              கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
ஆண் :  பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே
               வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி

இவ்வாறு காவிரி கொண்டாடப்பட்டிருக்கும்.

13 ஆண்டுகளுக்குப் பின் காவிரி ஆறு இப்போது கரை புரண்டு பொங்கி ஓடுகிறது. இதயக்கனி படப்பிடிப்பின்போதும் காவிரி பொங்கி ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சிகளை அப்பாடலில் இன்று பார்த்தால் இப்போது காட்சியளிக்கும் காவிரியை நாம் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.

எம்ஜிஆரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று படங்களும் 22-ம் தேதியில்தான் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவித்தன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்