மகள் மாஹியை தத்தெடுக்கவில்லை; பெற்றெடுத்திருக்கிறார் நடிகை ரேவதி


நடிகை ரேவதி மாஹி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவே இதுவரை அறியப்பட்டது. இந்நிலையில், அவர் அந்தக் குழந்தையை தத்தெடுக்கவில்லை ஐவிஎஃப் முறை மூலம் பெற்றெடுத்திருக்கிறார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

மண்வாசனை படம் மூலம் தமிழ்ப் படத்துக்கு அறிமுகமானவர். இப்போதும் குணச்சித்திர நடிகையாக தனி முத்திரை பதித்து வருகிறார். தனது கணவர் சுரேஷ் மேனனைப் பிரிந்த பின்னர் நடிகை ரேவதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாக தகவல் வெளியானது.

ஆனால், அவர் அந்தக் குழந்தையை ஐவிஎஃப் முறைமூலம் விந்தணுக்களை தானமாகப் பெற்று கருவில் சுமந்து பெற்றெடுத்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. குழந்தை வளர்ப்பு சம்பந்தமான இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குழந்தை மாஹி குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

"நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அவள் வானத்திலிருந்து வந்த பரிசுபோல் என்னிடம் வந்தாள். நான் தத்தெடுக்க முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், எனக்கு பிறந்த குழந்தையைத் தத்துத் தர சட்டத்தில் இடமில்லையாம். அதனால், ஐவிஎஃப் முறையை தேர்வு செய்தேன். ஸ்பெர்ம் தானமாக பெற்றேன். அவளது பிறப்பும் எங்களது பயணமும் எனது காத்திருப்புக்கும் கவலைகளுக்கும் அர்த்தம் தந்துள்ளது. விவரம் தெரிந்த பின்னர் அவள் இதை எப்படி ஏற்றுக் கொள்வாள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவளிடம் இது பற்றி பேசுவேன். உண்மையைச் சொல்வேன். என் அம்மாகூட அதையே சொன்னார்கள். உண்மையை சொல் அவள் புரிந்துகொள்ளமுடியும் எனக் கூறியிருக்கிறார்" என்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்