சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை நீடித்து வருவதால் மக்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.
சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும், சில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எச்சரித்துள்ளது.
அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவை துறைகளைத் தவிர்த்த அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.