[X] Close
 

 ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ - கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வக்பு வாரியம் 


yervadi-wakf-board

ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு ‘சீல்’ வைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் வக்பு வாரிய அலுவலர்கள்.

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 May, 2018 12:30 pm
  • அ+ அ-

ஹக்தார்கள் கமிட்டி கட்டுப்பாட்டில் இருந்த ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு ‘சீல்’ வைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் தமிழ்நாடு வக்பு வாரியம் கொண்டு வந்தது. 

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் பிரசித்திபெற்ற மகான் சுல்தான் செய்யது இபுராகீம் ஒலியுல்லாஹ் தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த தர்ஹாவிற்கு வந்து பிரார்த்தனை செய்தால், மனநோயாளிகள் குணமடைவதாக நம்பிக்கை உள்ளது. 

இந்த தர்ஹாவை தமிழ்நாடு வக்பு வாரியம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர, கடந்த 2011-ம் ஆண்டு அரசிதழில் (கெஜட்) அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு தர்ஹாவை நிர்வகிக்கும் ஏர்வாடி ஹக்தார்கள் கமிட்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஹக்தார் கமிட்டி தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு வக்புவாரியத் தீர்ப்பாயமான ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தர்ஹா ஹக்தார் கமிட்டியினரின் வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, தமிழ்நாடு வக்புவாரிய சென்னை அலுவலக உதவிச் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் 12 அலுவலர்கள் மற்றும் ராமநாதபுரம் மண்டல ஆய்வாளர் சேக் முகம்மது, மதுரை, திருநெல்வேலி மண்டல வக்பு வாரிய அலுவலர்கள் நேற்று ஏர்வாடி தர்ஹாவுக்கு வந்தனர். மேலும் ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் மதன், கீழக்கரை டிஎஸ்பி ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ராஜேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை, போலீஸாரும் அங்கு முகாமிட்டிருந்தனர். 

 ஹக்தார் கமிட்டியினர் ஏராளமானோர் கூடி, தங்களுக்கு எந்தவித அறிவிப்பும் செய்யாமல் தர்ஹாவை வக்பு வாரியம் கையகப்படுத்த நினைப்பது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு ‘சீல்’ வைத்த வக்புவாரிய அலுவலர்கள்| படங்கள்: எல். பாலச்சந்தர்

அதனையடுத்து அங்குள்ள விஏஓ அலுவலகத்தில் கோட்டாட்சியர் மதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

அதனையடுத்து மாலை 4.30 மணியளவில் கோட்டாட்சியர் மதன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட வக்பு வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின் அனைத்து அலுவலர்களும் தர்ஹாவுக்குள் சென்றனர். ஆனால், தர்ஹா மண்டபம் பூட்டப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வக்பு வாரிய அலுவலர்கள் மண்டபத்தில் இருந்த 6 உண்டியல்களுக்கு ‘சீல்’ வைத்துவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு வக்புவாரிய முதன்மைச் செயல் அலுவலர் தர்ஹா உண்டியல்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோம். தர்ஹாவை நிர்வகிக்கும் ஹக்தார் கமிட்டியினர் அதை ஏற்கவில்லை. அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல்களுக்கு ‘சீல்’ வைத் தோம் என்றார்.


 

 

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close