ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணி தேர்வு: தேர்வர்கள் ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைப் பணிகளுக்கான தேர்வெழுத விரும்புபவர்கள் ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உடற்கல்வி இயக்குநர் (கல்லூரி), அரசு சட்டக் கல்லூரி விளையாட்டு இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமேலாளர், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர், சிப்காட் உதவி மேலாளர் உட்பட 20 விதமான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைப் பணிகளில் 118 காலியிடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள் ளது. இந்த பணிகளுக்கான தேர்வு2 தாள்களாக நடத்தப்பட உள்ளது.

இதில் முதல் தாள் தேர்வில் தமிழ்தகுதித்தாள், பொது பாடம், மனத்திறன் சார்ந்த வினாக்கள் இடம்பெறும். இந்த தேர்வு ஜூலை 28-ம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து 2-ம் தாள் தேர்வு ஆக. 12 முதல் 16-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வானது அடிப்படை பொறியியல், வேளாண்மை, மனை அறிவியல், புள்ளியியல், பொருளியல், சட்டம்,உடற்கல்வி, கணிதம் உட்பட பல்வேறு பிரிவுகளை சார்ந்த வினாக்கள் அவரவர் பணிகளுக்கேற்ப நடத்தப்படும்.

இவ்விரு தேர்வில்வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்காணலில் கலந்து கொள்வார்கள். அதிலும் தேர்ச்சி அடைபவர்களுக்கு பணி வழங்கப்படும்.

இந்த தேர்வெழுத விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.in எனும்இணையதளம் வழியாக ஜூன் 14- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினால் ஜூன் 19 முதல் 21-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.