[X] Close
 

“சோடைபோன” பஞ்சாப்: டீவில்லியர்ஸ் அதிரடியில் கோலி அணிக்கு முதல் வெற்றி


rcb-open-account-with-last-over-win-vs-kxip

அரைசதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டீவில்லியர்ஸ்.

  • போத்திராஜ்
  • Posted: 14 Apr, 2018 00:58 am
  • அ+ அ-

 டீவில்லியல்ர்ஸின் அதிரடி ஆட்டம், உமேஷ் யாதவின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.  

ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தாங்கள் மோதிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி அடைந்துள்ளது.

11-வது ஐபில் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. பெங்ஙகளூரு சின்னச்சாமி அரங்கில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

டாஸ் வென்ற விராட் கோலி பீல்டிங் செய்ய முடிவெடுத்தார். கிங்ஸ்லெவன் அணியின் கே.எல். ராகுல்,அகர்வால் அதிரடியான  தொடக்கத்தை கொடுத்தார்கள்.

கிறிஸ்வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் விளாசி கே.எல். ராகுல் மிரள வைத்தார். உமேஷ் யாதவ் வீசிய 2-வது ஓவரில் 2 பவுண்டரிகள அடித்து அகர்வால் அதிரடியை வெளிப்படுத்தினார்.

4-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீச வந்தபோதுதான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் மளமளவெனச் சாய்த்தார்.

அதிரடியாக தொடங்கிய அகர்வாலை 15 ரன்களிலும், அடுத்து வந்த ஆரோன் பிஞ்சையும் டக்அவுட்டில் துரத்தினார் யாதவ். வந்தவேகத்தில் பவுண்டரி அடித்த யுவராஜ் சிங்கை ஸ்டெம்ப் தெறிக்க போல்டாக்கி உமேஷ் யாதவ் பெவிலியன் திரும்பினார்.

இதனால், 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி திணறியது. அதன்பின் ராகுலும், கருண் நாயரும் நிதானமாக பேட் செய்து ரன்ரேட்டை உயர்த்தினார்கள். அவ்வப்போது இருவரும் சிக்சரும், பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

இருவரையும் பிரிக்கும் முயற்சியில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. நிதானமாக பேட் செய்துவந்த கே.எல்.ராகுலை 47ரன்களில்(30பந்துகள், 2பவுண்டரி,4 சிக்ஸர்)சுந்தர் வெளியேற்றினார். ராகுல் ஆட்டமிழந்து சென்றபின் பஞ்சாப் அணியின் ரன்விகிதம் படுத்துக்கொண்டது.

இதைப் பயன்படுத்திக்கொண்ட பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

கருண் நாயக் 29ரன்களில் கேஜ்ரோலியா வேகத்தில் போல்டாகினார்.அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 11, அக்சர் படேல் 2, அஸ்வின் 33, டை 7, முஜிபுர் ரஹ்மான் 0 என விரைவாக ஆட்டமிழந்தனர்.

19.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப்அணி ஆட்டமிழந்தது. பெங்களூரு அணித் தரப்பில் உமேஷ்யாதவ் 3விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ், கேஜ்ரோலியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. டீகாக், மெக்குலம் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் மெக்குலம் டக்அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அணியின் பேட்டிங் தூண்களில் முக்கியமான வீரரான மெக்குலம் ஆட்டமிழந்தது பெங்களுரு அணிக்கு இடியாய் இறங்கியது.

அடுத்து வந்த விராட் கோலி, டீகாக்குடன் இணைந்தார். மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை உயர்த்ினார். விராட் கோலி குறிப்பாக முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் திணறினார்.

 அதேபோல அவரிடமே விக்கெட்டையைும் விராட் கோலி பறிகொடுத்தார். 21 ரன்கள் சேர்த்து விராட் கோலி(4பவுண்டரிகள்)முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

4-வதாக களமிறங்கிய டீவில்லியர்ஸ், டீக்காகுடன் சேர்ந்து, அதிரடியாக ஆடினார். ஓவருக்கு ஒரு பவுண்டரியை வெளியே தள்ளி டீவில்லியர்ஸ் தனது இருப்பை வெளிப்படுத்தினார். சர்மா வீசிய 8-வது ஓவரில் டீவில்லியர்ஸ் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், டீகாக் ஒரு பவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்கள்.

12-வது ஓவரை அஸ்வின் வீசி அடுத்தடுத்து  இரு விக்கெட்டுகளை சாய்த்து நெருக்கடி கொடுத்தார். நிதானமாக பேட் செய்துவந்த டீகாக்கை 45ரன்களிலும்(34பந்துகள், 7பவுண்டரி, ஒருசிக்ஸர்) அடுத்த பந்தில் கானை பெவிலியன் அனுப்பினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பெங்களூரு அணி இழந்ததால், தடுமாற்றம் அடைந்தது. 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய மன்தீப் சிங், டீவ்வில்லியர்ஸ்க்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து பேட் செய்தார்.

டீவில்லியர்ஸ் தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பினார். 4 ஓவர்களில் 41 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரில் அடுத்தடுத்து  இரு சிக்சர்களை டீவ்வில்லியர்ஸ் விளாசினார். தனது பங்கிற்கு மன்தீப் சிங் ஒருபவுண்டரியும் அடிக்க ஆட்டத்தின் பரபரப்பு சற்றுஅடங்கியது.

பொறுப்புடன் ஆடிய டீவில்லியர்ஸ் டி20 போட்டியில் ஒருசிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 40பந்துகளில் 57 ரன்கள் சேர்த்திருந்த டீவ்லில்லியர்ஸ் டை பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டீவில்லியர்ஸ் கணக்கில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

டை வீசிய 19வது ஓவரில் மன்தீப் சிங் 22ரன்களில் ரன் அவுட்ஆகினார். இதனால், 6 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

சர்மா வீசிய 20ஓவரை வாஷிங்டன் சுந்தர் எதிர்கொண்டார். முதல் பந்தில் தேர்டுமேன் திசையில் ஒருபவுண்டரியும், 3-வது பந்தில் கவர் திசையில் ஒருபவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.

கிறிஸ் வோக்ஸ் ஒரு ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கிங்ஸ்லெவன் பஞ்சாப்அணித் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close