கள்ளழகர் கோயில் வசந்த உற்சவ விழா


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வசந்த உற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவ விழா மே 14-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலையில் சுந்தர ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் இருப் பிடத்திலிருந்து புறப்பட்டு ஆடி வீதிகள், கிருஷ்ணர் சந்நிதி, 18-ம் படி கருப்பணசாமி கோயில் வழியாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அதனையொட்டி, வசந்த மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. வசந்த மண்டபம் முன்புள்ள வளாகத்தில் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவின் 2-ம் நாளான நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் சுந்தர ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வசந்த மண்டபத்தை சுற்றியுள்ள அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு தாமரை மலர்கள் மிதக்கவிடப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.