பர்கூர் அருகே திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி


மகாபாரத பெருவிழாவை முன்னிட்டு, பர்கூர் அருகே முருக்கம்பள்ளம் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி: மகாபாரத பெருவிழாவை முன்னிட்டு, பர்கூர் அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் 18 நாட்கள் சொற்பொழிவும், 29-ம் தேதி முதல் 13 நாட்கள் தெருக் கூத்து நாடகமும் நடந்தது. இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, பக்காசூரனுக்குச் சோறு எடுத்தல், வில் வளைப்பு, திரவுபதிக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், காண்டாவன தகனம், சராசந்திரன் சண்டை, துயில், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம், அர்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் ஆகியவை நடந்தன. கடைசி நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காகக் கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் செய்து, பீமன், துரியோதனனை வதம் செய்யும் நாடக நிகழ்ச்சி நடந்தது. இரவு தொடங்கி விடிய, விடிய நடந்த இந்த நிகழ்வை, பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஏற்பாடுகளை 8 கிராமங்களைச் சேர்ந்த கோயில் தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.