[X] Close
 

கடும் வறட்சியால் அழிந்துபோன சிந்து சமவெளி நாகரீகம்: ஆராய்ச்சியில் புதிய தகவல்கள்


indus-civilisation-iit-kharagpur

  • நெல்லை ஜனா
  • Posted: 16 Apr, 2018 16:14 pm
  • அ+ அ-

சிந்து சமவெளி நாகரீகம் 4 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன், கடுமையான வறட்சியால் அழிந்துபோனதாக கராக்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகின் மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்றான, சிந்து சமவெளி நாகரிகம் 4,500 ஆண்டுகள் முதல் 8,000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. நாகரீகத்தின் தோற்றம் குறித்து வரலாற்று அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

சிந்து சமவெளி நாகரீகத்தின் புதைந்த நகரங்கள், மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகள் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், இன்றைய பாகிஸ்தானிலும் இருக்கின்றன. மேம்பட்ட துப்புரவு அமைப்புகளுடன் கூடிய திட்டமிடப்பட்ட பெருநகரமைப்பு இந்திய நாகரீக தொன்மையை வெளிப்படுத்துகின்றன.

சிந்து சமவெளி நாகரீகம் நிலவிய காலம் குறித்த குழப்பம் இருப்பது போலவே, அது அழிந்துபோனதற்கான காரணமும் இதுவரை உறுதிப்படவில்லை. எனினும் எகிப்து உட்பட பிறநாகரீகங்கள் அழிந்தது போலவே சிந்து சமவெளி நாகரீகமும், வறட்சியால் அழிந்து இருக்கலாம் என சில ஆண்டுகளுக்கு முன் சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காரக்பூர் ஐஐடி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர்கள் சிலர் சிந்து சமவெளி நாகரீகம் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை சமீபத்தில் செய்துள்ளனர். அதில், 4,300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கடும் வறட்சி நிலவியது தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகள் நிலவிய இந்த வறட்சியால் மக்கள் கூட்டம், சிந்து நதி கரை பகுதியை விட்டு கங்கை நதி கரைப்பகுதிக்கு புலம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய உத்தரப் பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு இடம் மாறி சென்றதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 5 ஆயிரம் ஆண்டு காலங்களில் நிலவிய காலநிலை குறித்தும், அதனால் பூமியில் இருந்த தண்ணீரின் அளவு குறித்து காரக்பூர் ஐஐடி நிறுவனத்தின் நிலவியல் மற்றும் நில இயற்பியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

அதில் 4,350 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதி பகுதியில் கடும் வறட்சி இருந்ததை உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, கிழக்கு பகுதியில் வறட்சி குறைவாக இருந்ததால் அந்த பகுதிக்கு மக்கள் சென்றிருக்கூடும் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  

 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close