ஆவடி | மீட்கப்பட்ட நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ஆவடி: திருநின்றவூர், மாங்காடு, மீஞ்சூர், சாத்தாங்காடு உள்ளிட்ட ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில் 2023-24-ம் ஆண்டில் திருடு போன தங்க நகைகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் மீட்டுள்ளனர்.

அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஆவடி, சத்தியமூர்த்தி நகர்காவலர் திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில் திருடுப் போய் மீட்கப்பட்ட ரூ.1.11 கோடி மதிப்பிலான 185 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 398 மொபைல் போன்கள், ரூ.4.67 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை உரியவர்களிடம் ஆவடி காவல் ஆணையர் கி. சங்கர் ஒப்படைத்தார்.

காவல்துறை அதிகாரிகள், காவலர்களை, காவல் ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி, ஆவடி, செங்குன்றம் காவல் துணை ஆணையர்கள் ஐமான் ஜமால், பாலகிருஷ்ணன், உதவி காவல் ஆணையர்கள், காவல் ஆய் வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்