[X] Close
 

விஜய்யின் ஆதரவைக் கோரிய ஜெயலலிதா: அரசியல் ரகசியங்கள் சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர்


sac-about-vijay-politics

எஸ்.ஏ.சந்திரசேகர் | கோப்புப் படம்: எல்.ஸ்ரீனிவாசன்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 14 May, 2018 17:07 pm
  • அ+ அ-

தனது மகன் விஜய் நட்சத்திரமாக வளர்ந்ததும், அவருக்கு தமிழகம் முழுவதும் இருக்கும் வலுவான ரசிகர் கூட்டம் காரணமாகவும், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு தொந்தரவு கொடுத்தன என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். அதில், திமுக அதிமுக கட்சிகளுக்கும், தன் மகனும் நடிகருமான விஜக்கும் நடுவில் நிலவும் சூழல் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

"ஈழத்தமிழர்களுக்காக, விஜய் ரசிகர்கள், ஒரே நாளில் தமிழகம் முழுக்க 300 இடங்களில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதுதான் விஜய்யை பார்த்து சிலர் மிரண்டனர். விஜய்க்கு இவ்வளவு சக்தியா என்று யோசிக்க ஆரம்பித்தனர். இது ஏதாவது பயத்தை உண்டாக்கியதா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விஜய் நடித்த படங்களுக்குப் பிரச்சினைகள் வர ஆரம்பித்தன"என்று சந்திரசேகர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தனக்கு மானசீகமான குரு என்று கூறிய சந்திரேசர், அவருடன் அரசியல் தாண்டி நட்பு ரீதியான பழக்கம் இருந்ததாகக் கூறினார். "விஜய் ரசிகர்கள் நடத்தவிருந்த நலத்திட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இது குறித்து, முன் அனுமதி பெறாமலே கலைஞர் அவர்களை நானும் விஜயும் நேரில் சென்று சந்தித்துப் பேசினோம். கலைஞர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை உடனடியாகத் தொடர்புகொண்டு பேசி, இனி இப்படி நடக்காது என்று எங்களுக்கு உத்திரவாதம் தந்தார். ஆனால் இன்னொரு நிகழ்ச்சிக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்தனர். விஜய்யின் படங்களுக்கும் பிரச்சினைகள் உருவாகின".

திமுக குறித்து விஜய் தரப்பில் அதிருப்தி இருப்பதை தெரிந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சந்திரசேகரை அழைத்து, 2011 தேர்தலில் ஆதரவு கோரியுள்ளார். "அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் என் வீட்டுக்கு வந்தனர். அம்மா என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். விஜய்யும் அந்த சூழலில் திமுக தரப்பிடம் அதிருப்தியில் இருந்ததால் சரி என்றார். நான் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றேன்.

அவர், சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் ஆதரவு வேண்டும் என்றும், உங்களுக்கு என்ன வேண்டும் என்றும் கேட்டார். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த ஆதாயமும் வேண்டாம், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலனடைய வேண்டும். எனவே எங்களுக்கு 15 சீட்டுகள் வேண்டும் எனக் கேட்டேன்.

3 சீட்டுகள் மட்டுமே தர முடியும் என்று அதிமுக தரப்பில் சொல்ல நாங்கள் அதை மறுத்து விட்டோம். பின்னர், மீண்டும் ஜெயலலிதாவை சந்திக்க அழைப்பு வந்தது. விஜய்யிடம் பேசிவிட்டு, அவர் சரி என்று சொன்னதால் ஜெயலலிதா அவர்களை சந்தித்தேன்.

அவர், நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். உங்கள் பிரச்ச்சினைகள் என்னவென்று எனக்குத் தெரியும். நான் இருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றார். திமுக வலுவாக இருக்கும் 40 தொகுதிகளிலும் என்னை பிரச்சாரம் செய்ய அழைத்தார். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பேட்டி தர வேண்டும் என்றும் கேட்டார். நான் பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் விஜய் இளையவர். அவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தட்டும் என்று கூறினேன். நான் 39 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். விஜய் ரசிகர்களின் களப் பணியை அதிமுக அமைச்சர்கள் என்னை அழைத்து பாராட்டினார்கள். 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் அதிமுக வென்றது.

பின், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் அவரை நாங்கள் சந்தித்தோம். அதுவரை விஜய், ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. ராஜ்ய சபா எம்.பி ஆக விஜய்க்கு ஆர்வம் உள்ளதா என்று அவர் கேட்டார். நாங்கள் எதையும் எதிர்பார்த்து இதை செய்யவில்லை. எது நல்லது என நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். எங்களுக்குத் தேவை நல்ல ஆட்சி மட்டுமே என்று பதில் கூறினோம்.

ஆனால் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல அதிமுக ஆட்சி அமைக்க நாங்கள் உதவினோம் என்று நான் அளித்த பேட்டி ஒன்று அதிமுக தரப்பை கோபம் கொள்ளச் செய்தது. நான் பேசியதை ஜெயலலிதா அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தப் பேட்டிக்குப் பிறகு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தலைவா ஆகிய படங்கள் வெளியீட்டின் போது பிரச்சினைகளை சந்தித்தன.

பிறகு, விஜய் தன்னிச்சையாக கோடநாடு சென்று ஜெயலலிதா அவர்களை சந்திக்க முற்பட்டார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக தரப்புக்கும் விஜய்க்கும் விரிசல் பெரிதாக, அடுத்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு வேண்டாம் என்ற முடிவை விஜய் எடுத்தார்.

அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எனக்குத் தெரியாது. அதை அவர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழல் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன். விஜய்யின் அமைப்பு அவருக்கு மிகப்பெரிய பலம். " என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close