[X] Close
 

பழைய பன்னீர்செல்வமா வரணும் கேப்டன்! எஸ்.ஏ.சி.  ஆர்.கே.செல்வமணி, கலைப்புலி தாணு... யாருக்கு கால்ஷீட்? ரசிகர்கள் பட்டிமன்றம்


pazhaya-panneer-selvama-varanum-captain

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Apr, 2018 12:57 pm
  • அ+ அ-

விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடிக்கவேண்டும். அவரை வைத்து நான் படம் எடுக்கிறேன் என்று மூன்று பேர் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் கேட்டிருக்கிறார்கள். விஜயகாந்த் கால்ஷீட் கொடுப்பாரா? மீண்டும் படங்களில் நடிப்பாரா? என்று ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் திரையுலகத்தினரும் ரசிகர்களும்!

நடிகர் விஜயகாந்த் திரையுலகுக்கு வந்து, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை பிரமாண்டமான விழாவாக தேமுதிகவினர் நடத்தினார்கள். இந்த விழாவுக்கு, கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்திருந்து, வாழ்த்தினார்கள்.

குறிப்பாக, நடிகர் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்துவந்த நிலையில், அவருக்கு முதல் ஹிட் கிடைத்தது சட்டம் ஒரு இருட்டறை படம்தான். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முதல் படமும் இதுவே! கிட்டத்தட்ட அவர் இயக்கத்தில் 17 படங்கள் நடித்திருக்கிறார் விஜயகாந்த்.

அதேபோல், விஜயகாந்தை வைத்து எடுத்த கூலிக்காரன் படத்திற்கு, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மிகப் பிரமாண்டமான முறையில், விளம்பரங்கள் செய்திருந்தார். இப்படியான விளம்பர யுக்திகள் தாணு ஸ்டைல் என்றே சினிமாத்துறையில் சொல்லுவார்கள். இந்த விளம்பரங்கள், விஜயகாந்துக்கு நட்சத்திர அந்தஸ்தை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, பட்டிதொட்டியெங்கும் இன்னும் ஒளிரத் தொடங்கினார் விஜயகாந்த்.

சட்டம் ஒரு இருட்டறைக்குப் பிறகு ஊமை விழிகள் போல பிரமாண்டமான வெற்றிப் படங்கள் பல வந்தாலும் கூட, விஜயகாந்துக்கு இரண்டு படங்கள் மிக மிக முக்கியமானவை. ஒன்று புலன் விசாரணை. திருமணத்துக்கு இருபது நாட்களுக்கு முன்னதாக வந்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

‘இதுவரைக்கும் தொடர்ந்து நாலுபடங்கள் தோத்துப் போயிருச்சு. இப்ப இந்தப்படம் தோத்துப் போனா, அஞ்சாவது படம். இன்னும் 9 படங்கள் கைவசம் இருக்கு. ஆனா உனக்கு இதான் முதல் படம். தோத்துட்டா, நீ வீட்டுக்குப் போயிடவேண்டியதுதான்’ என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் விஜயகாந்த அட்வைஸ் செய்தார்.  அவரும் முழு ஈடுபாட்டுடன் படத்தை எடுத்துமுடித்தார். ‘என்ன செல்வமணி, படம் ஓடிருமாய்யா. இன்னும் இருபது நாள்ல கல்யாணம். படம் ஜெயிச்சா, ஒரு கெளரவமா இருக்கும். கம்பீரமா மணமேடைல நிக்கலாம். ஓடிரும்தானே’ என்று கேட்டார் விஜயகாந்த்.

எதிர்பார்த்ததை விட மெகா வெற்றி கிடைத்து, ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே ஓடி, வெள்ளிவிழாவைக் கொண்டாடியது புலன்விசாரணை. திருமணத்துக்கு வந்திருந்த ஆர்.கே.செல்வமணியை அப்படியே வாரியணைத்துக் கொண்ட விஜயகாந்த், ‘செல்வமணி எனக்குக் கொடுத்த கல்யாணப் பரிசு புலன்விசாரணை’ என்று மேடையிலேயே பாராட்டிப் பேசினார்.

அதுமட்டுமா? விஜயகாந்தின் நூறாவது படத்தை இயக்கியவரும் ஆர்.கே.செல்வமணிதான். அதுதான் கேப்டன் பிரபாகரன். இன்றைக்கு திரையுலகிலும் ரசிகர்களும் தொண்டர்களும் கேப்டன் என்று அழைப்பதற்குக் காரணமாக அமைந்த படம் இது. ஆகவே விஜயகாந்த் வாழ்வில் புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், ஆர்.கே.செல்வமணிக்கு முக்கிய இடம் உண்டு.

இப்போது விஜயகாந்தின் 40 ஆண்டு கால திரையுலகப் பாராடு விழாவில், ‘மீண்டும் விஜயகாந்த் நடிக்க வரவேண்டும். அவரை வைத்து நான் படம் இயக்குகிறேன்’ என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்ல, ‘விஜயகாந்தை எங்களிடம் ஒப்படையுங்கள். பழையபடி சிங்கம் போல திருப்பிக் கொடுக்கிறோம். ஒரேயொரு படம் இயக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று ஆர்.கே.செல்வமணி சொல்ல... ‘விஜயகாந்தை வைத்து பிரமாண்டமான படத்தைத் தயாரிக்க தயாராக இருக்கிறேன்’ என்று கலைப்புலி தாணு சொல்ல... ‘கேப்டன் நிச்சயம் நடிப்பார்’ என்று பிரேமலதா விஜயகாந்த் உறுதியாகச் சொல்ல... மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்துக் குதூகலித்தது.

விஜயகாந்த் யாருக்கு கால்ஷீட் கொடுப்பார்? எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கா? கலைப்புலி தாணுவுக்கா? ஆர்.கே.செல்வமணிக்கா? இதுதான் இப்போது திரையுலகின் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் கேள்வி. மூவருக்குமே படங்கள் பண்ணுவாரா? என்றும் ரசிகர்களும் தொண்டர்களூம் கேள்வி கேட்டு, பட்டிமன்றமே நடத்தத் தொடங்கிவிட்டனர்.

‘விஜயகாந்த்... பெயருக்கேத்த மாதிரி, காந்தம்தான். எல்லாமே வெற்றிதான். இவரோட எல்லாப் படமுமே அப்படி வசூலை வாரிக்குவிச்சிருக்கு. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்னு நிறைய பேரை வாழவைச்சிருக்காரு கேப்டன். வாழவைச்சிருக்கு அவரோட படங்கள். அதனால நாங்களும் அவரோட எண்ட்ரியை எதிர்பார்க்கிறோம்’ என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர்.

கேப்டன் வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்!   

 

தொடர்புடைய செய்திகள்

 
 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close