[X] Close
 

அஞ்சாத பஞ்சாப்புக்கு 5-வது வெற்றி: டெல்லி படுதோல்வி


kxip-top-table-with-4-run-victory-over-struggling-dd

டெல்லி அணிய வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடும் பஞ்சாப் அணியினர்

  • போத்திராஜ்
  • Posted: 24 Apr, 2018 08:29 am
  • அ+ அ-

டெல்லி,

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

மிகவும் எளிய இலக்கை சேஸிங் செய்ய முடியாத அளவுக்கு டெல்லி அணி பலவீனமாக இருக்கும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. கேப்டன் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை இந்த ஐபிஎல் போட்டியோடு முடிவுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பதுபோல் அவரின் பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் தேய்ந்துவருகிறது.

இதுவரை ஒருபோட்டியில் கூட கம்பீர் 15 ரன்களைத் தாண்டவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் யாராவது குறிப்பிட்ட வீரர் மீது ஒட்டுமொத்த பாரத்தையும் ஏற்றி விளையாடுவது டெல்லி அணியின் தொடர் சரிவுக்கு காரணமாகும். வீரர்கள் மனரீதியாகவே நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்ற தோற்றமே காணப்படுகிறது.ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் நிலைத்து ஆடி 57 ரன்கள் சேர்க்காமல் விட்டுருந்தால், டெல்லி அணியின் நிலை நகைப்புக்கு ஆளாகி இருக்கும்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அஸ்வின் தலைமையில் அந்த அணி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கெயில் புயல் இல்லாததால் என்னவோ திடீரென 150 ரன்களுக்குள் சுருண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பந்துவீச்சில் டெல்லி அணிக்கு கடும் நெருக்கடி அளித்து இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆட்ட நாயகன் விருது 2 விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜ்பூட்டுக்கு வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டியில் இரு அணிகளும் சுவரஸ்யமில்லாத பேட்டிங்கையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தின என்றுதான் கூற முடியும்.இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் 5வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 5 தோல்வி, என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களைச் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணியில் ஆரோன் பிஞ்ச், ராகுல்ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து அகர்வால் களமிறங்கினார். போல்ட் வீசிய 3-வது ஓவரில் ராகுல் ஒருபவுண்டரியும், அகர்வால் 2 பவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். ஆவேஷ்கான் வீசிய 4-வது ஓவரில் அகர்வால் பவுண்டரியும், ராகுல் சிக்ஸரும் அடித்தனர்.

நிதானமாக பேட் செய்த ராகுல் 23 ரன்களில் பிளங்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் ரன்சேர்க்கும் வேகம் குறைந்து, “சிங்கிளாகச்” சேர்த்தனர். கருண்நாயர் களம்கண்டார்.  பிளங்கெட் வீசிய 8-வது  ஓவரில் அகர்வால் 21 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். யுவராஜ் சிங் களமிறங்கினார்.

கடந்த 5 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டு ஒருபோட்டியில் கூட 20 ரன்களைத் தாண்டாமல் யுவராஜ் சிங்கின் பேட்டிங் தேய்ந்து வருகிறது.அடுத்து ஐபிஎல் தொடரில் அணிகள் யுவராஜ் சிங்கை ஏலத்தில் அணிகள் எடுப்பது சந்தேகமே. 14 ரன்களில் யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார்.அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மில்லர் 26, அஸ்வின்6, டை 3 ரன்களில் வெளியேறினர். ஓரளவுக்கு தாக்குப்படித்த கருண்நாயர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

85 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி கடைசி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தரப்பில் பிளங்கெட் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ்கான், போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன், டெல்லி அணி களமிறங்கியது. 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்த பிரிதிவ் ஷா, கம்பீர் ஆட்டத்தை தொடங்கினார்கள். ஓவருக்கு 7 ரன்கள் சேர்த்திருந்தால் கூட வெற்றி கிடைத்திருக்கும்.

கம்பீருக்கு கிரிக்கெட்டில் அனுபவம் கிடைத்ததுபோல், வயதும் ஆகிவிட்டது என்பதை இந்தபோட்டியில் பார்க்க முடிந்தது. காலை நகட்டி முன்புறமாகவோ அல்லது பேக்புட் அடித்து பேட் செய்தால்தான் ஓரளவுக்கு களத்தில் தாக்குபிடிக்க முடியும். ஆனால், கான்க்கிரீட் கலவைக்குள் காலை நுழைத்தது போன்று நின்ற இடத்தை விட்டு நகராமல் கம்பீர் பேட் செய்தது கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு எரிச்சலூட்டும் நிகழ்வாக இருந்தது.

அடுத்த ஐபிஎல் போட்டிக்குமுன் கம்பீர் ஓய்வு அறிவித்தால் கவுரமானதாக இருக்கும், இல்லாவிட்டால், அடுத்த ஏலத்தில் அவர் விலைபோவாரா என்பது கேள்விக்குறியே.பிரிதிவ்ஷா அதிரடியாக பேட் செய்து 10 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்ளிட்ட 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தவந்த மேக்ஸ்வெல் 12 ரன்களுடன் இந்த முறையும் ஏமாற்றினார். கம்பீர் 4 ரன்களில் வெளியேறினார்.

ஸ்ரேயாஸ் அய்யர் களத்தில் நின்று விளையாடும்போது அவருக்கு துணையாக எந்த வீரரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ரிஸ்பா பந்த் 4 ரன்னிலும், கிறிஸ்டியன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திவேசியா, ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ஓரளவுக்கு ரன்களை இருவரும் சேர்த்து வெற்றிக்கு அருகே கொண்டு வந்தனர். திவேசியா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிளங்கெட் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

டெல்லி அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய ஸ்ரேயாஸ் அய்யர்

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் பந்துவீசினார். முதல் பந்தை வீணாக்கிய ஸ்ரேயாஸ், 2-வது பந்தில் சிக்ஸர் அடித்து பரபரப்பை அதிகப்படுத்தினார். 3-வது பந்தை தவறவிட்டு 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். இதனால் 2 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் தேர்ட்மேன் திசையில் பவுண்டரி அடிக்க இன்னும் டென்ஷன் எகிறியது. கடைசி பந்து சிக்ஸரா, பவுண்டரியா என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி பந்தில் ஸ்ரேயாஸ் லாங்ஆப் திசையில் தூக்கி அடிக்க அது பிஞ்ச் கைகளில் தஞ்சம் புகுந்தது. தனிஆளாகப் போராடிய ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தார்.பஞ்சாப் அணித் தரப்பில் ராஜ்பூட், முஜிபுர் ரஹ்மான், டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

 

 

 

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close