[X] Close
 

பாஜக தலைவர்களின் தொடர்பில் இரு; இல்லையேல் என்கவுன்ட்டர்: வைரலான ஆடியோ


viral-audio

  • பாரதி
  • Posted: 16 Apr, 2018 12:29 pm
  • அ+ அ-

பாஜக தலைவர்களின் தொடர்பில் இரு! இல்லையேல் என்கவுண்டர் செய்யப்படுவாய்!’ என உ.பி., கிரிமினலை மிரட்டிய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது எட்டு நிமிட தொலைபேசி உரையாடல் வைரலானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யின் புந்தேல்கண்ட் பகுதியின் முக்கிய கிரிமினல் குற்றவாளியாக இருப்பவர் லேக்ராஜ் யாதவ். இவர் மீது கொலை, ஆட்கடத்தல் மற்றும் பணம்கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் கைதானவ ஜாமீன் பெற்றூ தம் நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதாகப் புகார் உள்ளது.

இவருடன் ஜான்சியின் மவுரானிபூர் காவல்நிலைய ஆய்வாளர் சுனித் குமார் சிங் கடந்த வெள்ளிக்கிழமை லேக்ராஜை மொபைலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் ஆய்வாளர் சுனித், அவரை என்கவுண்டர் செய்யப்படுவதாக மிரட்டியுள்ளார். இதை தவிர்க்க ஜான்சி மாவட்ட பாஜக தலைவர் சஞ்சய் துபே மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகரான பாபினா ராஜீவ்சிங் பரிச்சா ஆகியோரை தொடர்பில் இருக்கும்படியும் யோசனை கூறியுள்ளார்.

தனது உரையாடலின் போது சுனித், ’உன் மீது 60 கிரிமினல் குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதனால் நீ என்கவுண்டர் செய்யப்பட பொருத்தமானவன். இதற்காக உபி அதிகாரிகளின் என்கவுண்டர் பட்டியலில் உனது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் இருந்து நீ தப்ப வேண்டுமானால் பாஜக தலைவர்களின் தொடர்பில் இரு. அவர்களுடன் பேசி

முடித்துக்கொள். நான் சொல்வது உனக்கு புரியும் என எண்ணுகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு லேக்ராஜ் யாதவ் பதில் தெரிவிக்கையில், தம மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை எனவும், இதுபோன்ற பொய்யான வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 8 நிமிடம் நடைபெற்ற இந்த உரையாடலை பதிவு செய்த லேக்ராஜ், அதை உபி செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து அந்த உரையாடல் பதிவு வைரலாகி வட இந்தியா முழுவதிலும் பரவியது. இதனால், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, ஆய்வாளர் சுனித்தை பணி இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.ஷபிமுன்னா

 

கடந்த ஒரு ஆண்டில் உபியில் பாஜக அரசில் சுமார் 2000 என்கவுண்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், 47 கிரிமினல்கள் கொல்லப்பட்டு, சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், உபியின் கிரிமினல்களில் சுமார் 6000 பேர் சரணடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த தவறான நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் யோகி, ‘கிரிமினல்களுக்கு புரியும் மொழியில் பதிலடி அளிக்கப்படும்’ எனப் பேசியுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், உபி அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close