[X] Close
 

ஆடுகளைக் காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட துணிச்சல் இளம் பெண்


indian-woman-rupali-meshram-fights-off-tiger-with-stick

புலியுடனான சண்டைக்கு பின் ரத்தம் சொட்ட சொட்ட தனது தாயுடன் செல்பி எடுத்துக்கொண்ட ரூபாளி படம்-2: மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் ருபாளியும், அவரின் தாய் ஜிஜாபாய்

  • போத்திராஜ்
  • Posted: 05 Apr, 2018 01:31 am
  • அ+ அ-

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் தமிழச்சி என தமிழ் இலக்கியங்களில் படித்திருக்கிறோம். இந்த துணிச்சல் தமிழ் பெண்ணுக்கு மட்டும் உரியது என்று நினைத்திருந்தோம். ஆனால், பெண்ணாகப் பிறந்த அனைவருக்கும் இந்த துணிச்சல் பொதுவானது என இந்த பெண் உணர்த்திவிட்டார்.

வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை புலி வேட்டையாட வந்தபோது, ஒரு சிறு கம்பு மூலம் புலியுடன் இளம் பெண் சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது.

இதில் அதிருஷ்டவசமாக அந்த இளம் பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்தார், ஆனால் ஆடுதான் பலியானது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியுள்ளநிலையில் தற்போதுதான் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபாளி மேஷ்ரம்(வயது23). இவரின் தாய் ஜிஜாபாய். இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று இரவு தனது வீட்டின் முன் ஆடுகளைக் கட்டிவிட்டு  ரூபாளி தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு ரூபாளி திடுக்கிட்டு எழுந்தார். கதவைத்திறந்து வெளியே பார்த்தபோது, ஆடுகள் கட்டியிருக்கும் ஒரு பட்டிக்குள் ஒரு புலி செல்ல முயல்வதை ரூபாளி பார்த்துவிட்டார்.

அங்கிருப்பது புலி என்று அறியாமல், கையில் கிடைத்த ஆடு மேய்க்கும் சிறு கம்பை எடுத்துக் கொண்டு புலியை விரட்ட ரூபாளி புறப்பட்டார். ரூபாளியைப் பார்த்த புலி, அவர் மீது பாய்ந்தது. ஆனால், தான் வைத்திருந்த கம்பால், புலிக்கு சில நிமிடங்கள் தாக்குக்காட்டி, அதன் மீது தாக்குதல் நடத்தி ரூபாளி கடும் சண்டையிட்டார். வந்திருந்தது புலியல்லவோ, தனது ஆவேசத்தையும் கோபத்தையும், ரூபாளிமீது காட்டிவிட்டது.

வெளியில் நடக்கும் சத்தம் கேட்டு, வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த ரூபாளியின் தாய் ஜிஜாபாய் வெளியே வந்து பார்த்து, அந்த காட்சியைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்.

தனது மகள் ஒரு புலியுடன் சிறிய கம்பால் சண்டையிடுகிறாளே, உயிருடன் திரும்புவாளா என்ற அச்சத்தில் ரூபாளியை காப்பாற்ற தாய் ஜிஜாபாய் வீட்டைவிட்டு வெளியேவந்தார்.

பசியிலும், கடும் கோபத்திலும் இருந்த புலி இருவர் மீதும் பாய்ந்தது, ஆனால் புலியுடன் சண்டையிட்டு தங்களை கடுமையாக தாக்காமல் ரூபாளி சாமாளித்தார். ஆனால், சுதாரித்த ஜிஜாபாய், ரூபாளியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டார். கடும்பசியுடன் இருந்த புலி ஒரு ஆட்டைக் கவ்விக் கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

ரூபாளியும், அவரின் தாய் ஜூஜாபாயும் புலியின் தாக்குதலில் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் சொட்ட சொட்ட வடிந்த நிலையில் ரூபாளி தனது மொபைல் மூலம் தனது தாயுடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். ரூபாளிக்கு முகம், இடுப்பு, தொடை, கால் பகுதிகளில் புலி கடித்ததால் காயம் ஏற்பட்டது. தாய் ஜிஜாபாய்க்கு நெற்றியிலும், தலையிலும், கையிலும் காயம் ஏற்பட்டது

அதன்பின் மறுநாள் காலை, நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று தாயும், மகளும் சிகிச்சை எடுத்தனர். ரூபாளியின் துணிச்சலான செயலை டாக்டர்கள் பாராட்டியுள்ளனர். 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ரூபாளியும்,அவரின் தாய் ஜூஜாபாயும் வீடு திரும்பினர்.

இந்த சம்பவம்  குறித்து டாக்டர்கள் கூறுகையில், “புலியிடம் ரூபாளி சண்டையிட்டு, காயத்துடன் உயிர் தப்பியது மிகவும்  அதிர்ஷ்டவசமானதாகும்” எனத் தெரிவித்தனர்.

துணிச்சல் பெண் ரூபாளி கூறுகையில் “என்னுடைய கிராமத்துக்கு அருகே காட்டு மிருகங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன். சிலசமயம் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பும்போது கவலைப்படுவேன், நான் அச்சம் கொண்டதில்லை. என் வீட்டுப்பகுதியில் புலி வந்துவிட்டு சென்றதும், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வருவதற்குள் புலி ஓடிவிட்டது” எனத் தெரிவித்தார்.

 

 

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close