[X] Close
 

பிரதமர் மோடி நாட்டை அழித்துவிடுவார்: ப்ளீஸ் வாக்களியுங்கள்: அமித் ஷா பேச்சை தப்பாக மொழிபெயர்த்தவரால் டென்ஷன்


pm-modi-will-destroy-nation-amit-shah-s-translator-goofs-up-at-karnataka-rally

  • போத்திராஜ்
  • Posted: 29 Mar, 2018 21:06 pm
  • அ+ அ-

கர்நாடக தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் மாறிவருகிறது. பாஜக தலைவர்கள் தவறுதலாகப் பேசும் வார்த்தைகள் கூட அடுத்த நாளில் தலைப்புச் செய்திகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் தேவேநாகரி எனும் இடத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி, எடியூரப்பா தான் என்று எடியூரப்பாவை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு பேசி கூட்டத்தில் டென்ஷன் ஏற்றினார். எடியூரப்பா முகம் வெளுத்துப்போனது. அதன்பின் அருகில் இருந்தவர்கள் சித்தராமையா என்று கூறியவுடன் அமித் ஷா தவறைத்திருத்திக்கொண்டார்.

கர்நாடகத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்ட நிலையில், எடியூரப்பா மிகப்பெரிய ஊழல்வாதி என தெரியாமல் அமித் ஷா கூறியது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், நகைப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதேபோன்ற, இல்லை அதைக்காட்டிலும் மிக கலகலப்பான சம்பவம்  தேவநாகரி மாவட்டத்தில் சால்கேரே எனும் இடத்தில் இன்று நடந்துள்ளது.

சால்கரே எனும் இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர் அமித் ஷா ஈடுபட்டு இருந்தார். அப்போது அமித் ஷா மக்கள் மத்தியில் இந்தியில் பேசுவதை, அதை கன்னடத்தில் மொழிபெயர்த்துக் கூற பிரகலாத் ஜோஷி என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

அமித் ஷா பேசியதை தவறாக மொழிபெயர்த்து பிரகலாத் பேசுகையில், “ கர்நாடகத்தில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஏழைகளுக்கும் பிரதமர் மோடி எந்த நல்லதிட்டங்களையும் செய்ய மாட்டார். இந்த நாட்டை மோடி அழித்துவிடுவார். தயது செய்து மோடிக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

இதைக் கேட்டு கூட்டத்தில் இருந்த மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது, சிலர் சிரித்தனர். ஆனால், பாஜகவினர் மத்தியில் ஒருவிதமான டென்ஷன் நிலவி, வேறுஒருவர் வந்து பேச்சை மொழிபெயர்த்தார்.

ஆனால், உண்மையில் அமித் ஷா பேசியது என்னவென்றால், சித்தராமையா அரசு கர்நாடக மாநிலத்தை மேம்படுத்தமுடியவில்லை. பிரதமர் மோடி மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆதலால், எடியூரப்பாவுக்கு வாக்களியுங்கள். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக கர்நாடக மாநிலத்தை மாற்றிக்காட்டுகிறோம்” எனப் பேசினார்.

பாஜகவினரின் தேர்தல் பிரசாரம் கர்நாடக மாநிலத்தில் களேபரத்தில் முடிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close