[X] Close
 

இபிஎப் இணையதளம் ஹேக்கிங்: 2.7 கோடி பேரின் தகவல்கள் திருட்டு?


epfo-data-hacked

  • நெல்லை ஜனா
  • Posted: 03 May, 2018 15:42 pm
  • அ+ அ-

இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த 2.7 கோடி தொழிலாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது. தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை வட்டியுடன் பிற்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளும் இதனுடன் சேர்ந்து கொடுக்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி அலுவலகம், தொழிலாளர்களின் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளம் வாயிலாக இணைக்க வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ள 2.7 கோடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் கணக்கு எண்ணுடன், அவர்களது ஆதார் எண் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் தகவல்களை திருடியுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி ஆணையர் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளம், ஹேக்கிங் செய்யப்பட்டதால் இணையதளமான aadhaar.epfoservices.com சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இபிஎப்ஓ இணையதளத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்ககுமாறு கோரியுள்ளார். இந்த ரகசிய கடிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்தத் தகவலை வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரங்கள் மறுத்துள்ளன. இணையளத்தை மறு சீரமைக்கும் பணிகள் நடப்பதால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் சேவை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close